உயிரை பறிக்கும் புளூவேல் விளையாட்டை தடுக்க தனிப்படை அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்


உயிரை பறிக்கும் புளூவேல் விளையாட்டை தடுக்க தனிப்படை அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2017 11:30 PM GMT (Updated: 31 Aug 2017 5:53 PM GMT)

உயிரை பறிக்கும் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கல விளையாட்டை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா நிருபர்களிடம் கூறியதாவது:–

 தற்போது உலகம் முழுவதும் நீலத்திமிங்கலம் எனப்படும் ஆபத்தான புளூவேல் ஆன்–லைன் விளையாட்டினால் பலர் பலியாகி வருகின்றனர். ஆபத்தான இந்த விளையாட்டினை உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்டு அதனை உருவாக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இருப்பினும் அந்த விளையாட்டின் லிங்க் எனப்படும் இணைப்பு வசதி பலருக்கும் இணையதளம் மூலம் பரவி வருவதால் அதன் ஆபத்தினை உணராமல் பலர் விளையாடி வருகின்றனர்.

மொத்தம் 50 வகையான பந்தயங்களை கொண்டுள்ள இந்த விளையாட்டில் இறுதியில் உயிரை பழிவாங்கும் அளவிற்கு கொண்டு போய்விடுகிறது. இந்த விளையாட்டின் விபரீதம் தெரியாமல் விளையாடிய மதுரையை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் பலியாகி உள்ளார். உலகம் முழுவதும் இந்த விளையாட்டினால் இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர். நீலத்திமிங்கலம் விளையாட்டினால் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டினால் யாரும் பலியாகி விடாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த விளையாட்டு குறித்து நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெற்றோர் தங்களின் குழந்தைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

நீண்ட நேரம் செல்போன், மடிக்கணினி, கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளில் பார்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தால் சுதாரித்து அதனை தடுக்க வேண்டும். முன்எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வால் மட்டுமே இதனை தடுக்க முடியும். மாவட்டத்தில் இந்த நீலத்திமிங்கல விளையாட்டை தடுக்கவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த தனிப்படையினர் நீலத்திமிங்கல விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சியை பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

காவல்துறையின் நடவடிக்கை மட்டுமல்லாது பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் அருகில் தெரிந்த நபர்கள் யாராவது இதுபோன்று நீலத்திமிங்கல விளையாட்டினை விளையாடுவது தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவித்தால் ஒரு உயிர் பலியாவது தடுக்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த விளையாட்டால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story