திருமணம் ஆன மறுநாள் மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த புதுப்பெண் படுகாயத்துடன் மீட்பு


திருமணம் ஆன மறுநாள் மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த புதுப்பெண் படுகாயத்துடன் மீட்பு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:40 PM GMT)

திருமணம் ஆன மறுநாள் கணவருடன் சாமி கும்பிட வந்தபோது பவானி அருகே 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த புதுப்பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

பவானி,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் இளங்கோவன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

இதேபோல் கரூரை சேர்ந்தவர் கிரிதரன். இவருடைய மகள் வைஷ்ணவி (வயது 24). இளங்கோவனுக்கும், வைஷ்ணவிக்கும் செப்டம்பர் 8–ந் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடத்த 2 பேரின் குடும்பத்தினராலும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இளங்கோவனுக்கும், வைஷ்ணவிக்கும் நேற்று முன்தினம் காலை திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியும், அவர்களுடைய குடும்பத்தினரும் அங்கிருந்து புறப்பட்டு குமாரபாளையத்துக்கு அன்று இரவே வந்தனர். இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிக்கு ‘முதல் இரவு’ நடப்பதற்கு நேற்று நாள் குறிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக நேற்று காலை குமாரபாளையத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று புதுமண தம்பதியினர் தங்களுடைய குடும்பத்தினருடன் சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் குடும்ப வழக்கப்படி சிவன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட அவர்கள் விரும்பினர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று மதியம் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை அருகே வேதகிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அவர்கள் அனைவரும் வந்தனர். அவர்கள் மலையில் உள்ள படிகளில் ஏறி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டு முடிந்ததும் மாலை 3 மணி அளவில் அங்கிருந்து படிகள் வழியாக அவர்கள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் வந்ததும் சிறுநீர் கழிப்பதற்காக மலையின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு வைஷ்ணவி சென்றார். கடந்த சில நாட்களாக வேதகிரி மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு பாறைகளின் மேல் படிந்து கிடந்தது. மேலும் சரிந்து கிடந்த மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதை கவனிக்காத வைஷ்ணவி அங்கு சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து ஓடி வர முயற்சிக்கையில் மலையில் இருந்து 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கீழ் நோக்கி உருண்டு கொண்டிருந்தார். தன் கண்முன்னே நடந்த இந்த காட்சியை கண்டதும், அதிர்ச்சியில் உறைந்து போன இளங்கோவன் சத்தம் போட்டுக்கொண்டே வைஷ்ணவியை காப்பாற்ற ஓடினார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இளங்கோவனின் சத்தம் கேட்டு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் சம்பவ இடம் நோக்கி ஓடோடி வந்தனர். அவர்களாலும் வைஷ்ணவியை காப்பாற்ற முடியவில்லை.

உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு மூலம் வைஷ்ணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மலையில் இருந்து உருண்டு விழுந்ததில் வைஷ்ணவிக்கு படுகாயம் ஏற்பட்டதுடன், பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார். தீயணைப்பு வீரர்கள், மற்றும் இளங்கோவன் ஆகியோர் கயிறு மூலம் 50 அடி பள்ளத்தில் இறங்கினர். பின்னர் அவர்கள் 3 பேரும் வைஷ்ணவியின் உடலில் கயிறு கட்டி மலையின் மேல் பகுதிக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு 6 மணி அளவில் வைஷ்ணவியை மீட்டு மலையின் மேல் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மலையடிவாரத்துக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story