கணவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் முடித்த பெண் என்ஜினீயர்


கணவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் முடித்த பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 14 Sep 2017 2:00 AM GMT (Updated: 13 Sep 2017 9:23 PM GMT)

தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவருக்கு ‘கல்தா‘ கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டார், ஒரு பெண் என்ஜினீயர். தகவல் அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பேட்டை,

நெல்லை டவுனை அடுத்த மேலகுன்னத்தூர் நல்லம்மாள் கட்டளை தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் குமார் (வயது 30). இவர் உடையார்பட்டியில் உள்ள ஒரு நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப்பில் ‘மெக்கானிக்காக‘ வேலை செய்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2010-ம் ஆண்டு இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய இவரது பெற்றோர், பெண் பார்த்து வந்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த முருகன் மகள் தனலட்சுமியை பெண் பார்த்தனர். அப்போது தனலட்சுமி பிளஸ்-டூ வரையில் படித்து இருந்தார். இரு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்து கொண்டதையடுத்து 2010-ம் ஆண்டு குமார்-தனலட்சுமி திருமணம் சீரோடும், சிறப்போடும் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் தனலட்சுமி, தான் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக குமாரிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட குமார், தான் தான் படிக்கவில்லை, தனது மனைவி என்ஜினீயரிங் படித்தால் அது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெருமைதானே என்று எண்ணினார். இதனையடுத்து தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்று குமார் முடிவு செய்தார்.

இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தையும், வீட்டில் இருந்த நகைகளையும் விற்று தனலட்சுமியை சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்க வைத்தார். கல்லூரி விடுதியில் தங்கிய தனலட்சுமி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பு படித்தார்.

விடுதியில் தங்கியிருந்த தனலட்சுமி, நெல்லையில் உள்ள தனது கணவர் குமாருடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். தனது மனைவி என்ஜினீயரிங் படிப்பதை குமார், தனது நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வந்துள்ளார். மனைவியின் படிப்புக்காக ஒர்க்‌ஷாப்பில் தரும் சம்பளம் முழுவதையும் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் மனைவியின் செலவுக்காக வேலை நேரம் போக கூடுதலாகவும் வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கல்லூரி விடுமுறை நாட்களில் சேலத்தில் இருந்து மேலக்குன்னத்தூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கும், எர்ணாகுளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கும் தனலட்சுமி சென்று வந்துள்ளார். இப்படியாக... 4 வருடங்கள் உருண்டோடியது. ஒருவழியாக தனலட்சுமி நான்கு வருட என்ஜினீயரிங் படிப்பையும் முடித்தார்.

பின்னர் சேலத்தில் இருந்து மேலக்குன்னத்தூர் வந்த தனலட்சுமி, தனது கணவரிடம் பி.இ. முடித்தாயிற்று. அடுத்ததாக மேல் படிப்பான எம்.இ. படிப்பையும் முடித்தால் தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று மேல் படிப்பு படிக்கும் தனது விருப்பதை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். மகுடிக்கு மயங்கிய நாகம்போல், மனைவியின் சொல்லில் மயங்கி கிடந்த குமார், மனைவியின் அடுத்த விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணினார். ஆனால் அதற்கு பொருளாதார வசதி அவருக்கு கைகொடுக்கவில்லை.

மனைவியை பி.இ. படிக்க வைப்பதற்காக ஏற்கனவே இருந்த சொத்து பத்தையும், நகைகளையும் விற்று விட்டாயிற்று. அடுத்து என்ன செய்வது? என்று குழம்பிய குமார் எப்படியும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றியே தீருவது என்று முடிவு செய்தார். இதனையடுத்து தனது உறவினர்கள் மற்றும் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் மனைவியின் படிப்புக்காக வட்டிக்கு பணம் கேட்டு உள்ளார். ஆனால் யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தனலட்சுமியின் தாயார், நான் எப்படியாவது பணத்தை புரட்டி என் மகளை மேல் படிப்பு படிக்க வைக்கிறேன். நீங்கள் அந்த பணத்தை பிறகு தாருங்கள் என்று கூறி மகளை தன்னுடன் திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்று விட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த குமார், மனைவியின் படிப்புக்காக பணம் புரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கினார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து மேலக்குன்னத்தூர் வந்த தனலட்சுமி, குமார் வீட்டில் இருந்த தனது படிப்பு சான்றிதழ்கள், ஆவணங்கள், உடமைகள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டார். அது குறித்து குமார் கேட்டதற்கு மேல் படிப்புக்காக சான்றிதழ்கள் தேவைப்படுவதாகவும், அதனால் அவைகளை எடுத்து செல்வதாகவும் கூறி குமாரை ஏமாற்றி அவைகளை எடுத்து சென்று விட்டார்.

இந்த நிலையில் தனலட்சுமியின் தாயார், தனது மகளுக்கு இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை தனது மகளிடம் தெரிவித்தார். அதற்கு தனலட்சுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மகளின் கணவர் இறந்து விட்டார் என்று ஏமாற்றி ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு தனலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த சம்பவம் எதுவும் தெரியாத நிலையில் குமார், வழக்கம்போல் தனலட்சுமியுடன் பேசுவதற்காக செல்போனில் அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தனலட்சுமி போனை எடுப்பதில்லையாம். அப்படியே போனை எடுத்தாலும் குமாருடன் சரிவர பேசுவதும் இல்லையாம்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள தனலட்சுமியின் உறவினர் ஒருவர் குமாரை யதேச்சையாக பார்த்துள்ளார். இறந்து விட்டதாக கூறியவர், உயிருடன் உள்ளாரே என்று அவர் அதிர்ச்சி அடைந்து குமாரை சந்தித்து பேசினார். நீங்கள் இறந்து விட்டதாக கூறி உங்கள் மனைவிக்கு 2-வது திருமணம் செய்து விட்டார்களே? நானும் அந்த திருமணத்திற்கு சென்று வந்தேனே என்று குமாரிடம் அவர் கூறியுள்ளார். அதை கேட்டதும் குமார் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

சொத்து, சுகங்களை விற்று, தான் தொட்டு தாலி கட்டிய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய தன்னை, மனைவி ஏமாற்றி மோசடி செய்து விட்டாளே என்று மனம் உடைந்த குமார் கதறி அழுதார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். அந்த புகாரில், தான் உயிரோடு இருக்கும்போதே தான் இறந்து விட்டதாக கூறி தனது மனைவி 2-வது திருமணம் செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவர் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக கூறி பெண் என்ஜினீயர் 2-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story