கொலை சம்பவம் சினிமாவில் வரும் திகில் காட்சி போல இருந்தது சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பேட்டி


கொலை சம்பவம் சினிமாவில் வரும் திகில் காட்சி போல இருந்தது சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2017 11:15 PM GMT (Updated: 22 Sep 2017 8:31 PM GMT)

கொலை சம்பவம் சினிமாவில் வரும் திகில் காட்சி போன்று இருந்தது என்று இரட்டைக்கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறினார்கள்.

கோவை செல்வபுரம் ஐ.யு.டி.பி. காலனியை சேர்ந்த செல்வராஜ், அவருடைய நண்பர் ஆனந்த் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போயினர்.பெரு பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது:–

மதியம் 1.30 மணிக்கு எங்கள் பகுதியில் உள்ள ரோட்டில் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவின் பின்னால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் வந்தவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சத்தமிட்டபடி துரத்தி வந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் கையில் வாள் மற்றும் நீளமான அரிவாள், கத்திகள் இருந்தன. இதை பார்த்ததும் நாங்கள் அனைவரும் அலறியடித்து வீடுகளுக்குள் ஓடி விட்டோம்.

அந்த ஆட்டோ சுகாதார வளாகம் அருகே வந்ததும் சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியது. இதனால் அதில் இருந்த 2 பேரும் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று அலறியபடி ஓடினார்கள். எனினும் அந்த கும்பல் அவர்களை மறித்து மரத்தை வெட்டுவதுபோன்று சரமாரியாக வெட்டித்தள்ளியது.

கும்பலாக பலர் சுற்றி நின்று வெட்டும்போது, அவர்கள் கையெடுத்து கும்பிட்டனர். எனினும் ஈவு, இரக்கம் இல்லாமல் சினிமாவில் நடப்பதுபோன்று பல இடங்களில் வெட்டினார்கள். இது போன்ற திகில் காட்சிகளை சினிமாவில் தான் பார்த்து இருக்கிறோம்.நேரில் பார்த்த பல பெண்கள், குழந்தைகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கோவையில் பட்டப்பகலில் பொதுமக்கள் சந்தடிமிக்க இ டத்தில் இப்படி ஒரு சம்பவமா? என்று திகிலாக இருக்கிறது.ஒரு கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிவிட்டால், அது அத்துடன் நின்று போகாது. தொடர்ந்து இதுபோன்றுதான் நடந்து கொண்டே இருக்கும்.

எனவே இந்த படுகொலையை செய்த கும்பலை கண்டுபிடித்து, இனிமேல் இதுபோன்று சம்பவம் நடக்காத அளவுக்கு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story