திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்


திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 Sep 2017 12:00 AM GMT (Updated: 23 Sep 2017 8:00 PM GMT)

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் அளித்தார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கேசவராஜுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 53). இவரது மனைவி சுசீலா (48). இவர்களது 2-வது மகள் இந்துமதி (20). இவருக்கும் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன் வேணுகோபால் (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக பெண் வீட்டார் தெரிவித்தனர். திருமணம் நடந்தபோது 10 பவுன் நகை போடப்பட்டது. மோட்டார் சைக்கிள் பிறகு வாங்கி தருவதாக பெண் வீட்டார் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பின்னர் வேணுகோபால் மோட்டார் சைக்கிள் வாங்கி வரும்படி மனைவியை தரக்குறைவாக பேசி அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இந்துமதி தன்னுடைய தாயாரிடம் போனில் கூறி அழுது உள்ளார்.

அப்போது தாய் சுசீலா மகள் இந்துமதிக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நேற்று காலை இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக இந்துமதியின் தாயார் சுசீலா பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்துமதி வரதட்சணை கொடுமையால் இறந்து போனாரா? என்பது குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story