இளம் போலீஸ் அதிகாரியின் மறுபக்கம்


இளம் போலீஸ் அதிகாரியின் மறுபக்கம்
x
தினத்தந்தி 24 Sep 2017 9:07 AM GMT (Updated: 24 Sep 2017 9:07 AM GMT)

அனிதா பிரபா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி. 25 வயதான இவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

னிதா பிரபா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி. 25 வயதான இவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இளம் வயதிலேயே உயர்ந்த பதவியை எட்டிப்பிடித்து விட்டாலும் அவருடைய வாழ்க்கை போராட்ட பின்னணியை கொண்டது. படிப்பில் படு சுட்டியாக விளங்கிய அனிதா அங்கு பாரம்பரியமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் திருமண முறைக்கு பலியாகிவிட்டார். 10-ம் வகுப்பில் 92 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். 17-வது வயதில் தன்னை விட 10 வயது மூத்த நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். எனினும் படிப்பை தொடர்வதில் விடாபிடியாக இருந்ததால் அவருடைய படிப்புக்கு புகுந்த வீட்டில் தடை விதிக்கவில்லை. இருந்தாலும் குடும்ப பொருளாதாரம் அவருடைய படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

அதையும் சமாளித்து கல்லூரி படிப்புக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். இறுதி ஆண்டு படிப்பு முடிவடையும் தருவாயில் கணவர் ரூபத்தில் அனிதாவுக்கு சோதனை ஏற்பட்டிருக்கிறது. இறுதி ஆண்டு தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவருடைய கணவர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அனிதாவால் தேர்வை முழுமையாக எழுதி முடிக்க முடியவில்லை. அதன் பிறகு வேலைக்கு செல்லும் முனைப்பில் வங்கி தேர்வை எழுதி இருக்கிறார். பட்டப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாததால் வங்கி வேலை வாய்ப்பு கைநழுவி விட்டது. குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த வேலையும் நெடுநாட்கள் நிலைக்கவில்லை. பின்னர் 2013-ம் ஆண்டு வனத்துறை தேர்வை எழுதி வெற்றி பெற்று ஊழியராக தன் பணியை தொடங்கி இருக்கிறார்.

அந்த பணியில் மன நிறைவு பெறாமல் அடுத்த நிலைக்கு செல்ல தீர்மானித்திருக்கிறார். தொடர்ந்து அரசு தேர்வுகளை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான உடல் தகுதி தேர்வில் தோல்விதான் அவருக்கு துணையாகி இருக்கிறது. அத்துடன் உடல்நலக்குறைபாடால் கர்ப்பப்பையில் கட்டி ஏற்பட்டு அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகி இருக்கிறார். அது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. 22 வயதிலேயே விவாகரத்து, இல்லற வாழ்க்கையை கசப்பாக மாற்றிவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு போலீஸ் துறையில் உயரதிகாரியாகும் கனவை நோக்கி தன் கவனத்தை திசை திருப்பி இருக்கிறார். மத்திய பிரதேச மாநில அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதியவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட்டார். 17-வது இடத்தை பிடித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகி விட்டார். 

Next Story