மதுரையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை


மதுரையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2017 12:15 AM GMT (Updated: 24 Sep 2017 8:39 PM GMT)

மதுரையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை,

மதுரை யாகப்பா நகர் சவுராஷ்டிராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஜெகஜோதி(வயது 70). இவருடைய மகன்கள் வேல்முருகன் (வயது 52), குறிஞ்சி குமரன் (45). இவர்கள் அந்தப் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வருகின்றனர். மேலும், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களையும் செய்து வந்துள்ளனர்.

வேல்முருகனின் மனைவி தேவி(45), மகள் ஜெயசக்தி(20), மகன் பிரவீன்(19). விருதுநகரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பிரவீன் படித்து வருகிறார்.

குறிஞ்சிகுமரனின் மனைவி தங்கசெல்வி(40), மகள்கள் ஜெயமோனிகா(15), தாரணி(20). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

குறிஞ்சிகுமரன், வேல்முருகனின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, பிரவீன் வரும் வழியில் விருதுநகரில் இறங்கி விட்டார். மற்றவர்கள் காரில் வீட்டிற்கு வந்தனர்.

குறிஞ்சிகுமரன் மற்றும் வேல்முருகன் நடத்தி வந்த தொழில்களில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில் “எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை“ என எழுதப்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் பாலில் வி‌ஷம் கலந்து ஒருவர் பின் ஒருவராக குடித்தனர். இதில் ஜெகஜோதி, ஜெயசக்தி, வேல்முருகன், தாரணி, குறிஞ்சிமுருகன் ஆகிய 5 பேர் இறந்தனர்.

மேலும் தேவி, தங்கசெல்வி, ஜெயமோனிகா ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தேவி, தங்கசெல்வி, ஜெயமோனிகா ஆகியோரை பத்திரமாக மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேவி பரிதாபமாக இறந்துபோனார்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தங்கசெல்வி, ஜெயமோனிகா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த பிரவீன் விருதுநகரில் இருந்து கிளம்பி வந்தார். கடன் தொல்லையால் தான் இறந்தார்களா, அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் குறிஞ்சிகுமரனின் வீட்டு முன்பு திரண்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், குறிஞ்சிகுமரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். முதலில் தனியார் பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். அதில் கிடைத்த லாபத்தின் மூலம் ரியல்எஸ்டேட், சிட்பண்ட் போன்ற தொழில்களை தொடங்கினர்.

ஏலச்சீட்டு நடத்தியபோதும் கூட ஒருவரை கூட இவர்கள் ஏமாற்றியது கிடையாது. மக்களிடம் வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் அவர்கள் கேட்கும் போது கொடுத்து வந்தனர். நாணயமான குடும்பம் தான்.

நேற்று முன்தினம் கூட குடும்பத்துடன் குற்றாலத்திற்கு செல்வதாக கூறி சென்றனர். எப்போதும் சந்தோ‌ஷமாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி கடன் தொல்லை ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

பணம் கொடுப்பதற்காக இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் குறிஞ்சிகுமரன் வீட்டிற்கு சென்றபோது தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களை காப்பாற்ற 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. வெகு நேரமாகியும் வராத காரணத்தால் 8 நபர்களையும் மினி பஸ்சில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் மேலும் சிலரை காப்பாற்றி இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story