திருமங்கலத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


திருமங்கலத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2017 12:15 AM GMT (Updated: 24 Sep 2017 8:12 PM GMT)

திருமங்கலத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர்,

சென்னை திருமங்கலம், பாடிகுப்பம் நான்கு ரோடு சந்திப்பில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பாடிகுப்பம் பிரதான சாலையில் சுமார் 20–க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் 3 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகிறது. மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்களால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த மதுக்கடையை மூடக்கோரி அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்துகொண்டனர். அவர்கள், ‘பள்ளிக்கூட பாதையில் மதுக்கடை வேண்டாமே’, ‘பொதுமக்களுக்கு தொந்தரவாய் மதுக்கடையா?’, ‘இழுத்து மூடு மதுக்கடையை’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, மதுக்கடையை மூடக்கோரி கோ‌ஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story