ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டால் சந்திக்க தயார்


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டால் சந்திக்க தயார்
x
தினத்தந்தி 24 Sep 2017 11:00 PM GMT (Updated: 24 Sep 2017 9:03 PM GMT)

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டால் சந்திக்க தயார் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அ.தி.மு.க. 2 ஆக பிரிந்தது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அணி என்றும் அ.தி.மு.க. அம்மா அணி என்றும் பிரிந்தது. பின்னர் 2 அணிகளும் ஒன்றாக சேர்ந்து விட்டன. அ.தி.மு.க. பிரிந்த போது தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சிதலைவி அணிக்கு சென்ற தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் கு.ராஜமாணிக்கம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லதுரை, சண்முகபிரபு, தங்கம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து பொன்னாடை போர்த்தினர்.

பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அ.தி.மு.க 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டன. 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பிரிந்த 2 அணிகளும் ஒன்றுபட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, அ.தி.மு.க. பொதுக்குழுவையும் சிறப்பாக நடத்தினர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தேர்தல் ஆணையத்திடமும் வழங்கி உள்ளோம். இன்னும் 15 நாட்களுக்குள் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துவிடும். உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்று நிரூபிப்போம். இனி வருகின்ற உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் எப்படி வெற்றி பெற்றோமோ? அதைவிட பெரிய வெற்றியை பெறுவோம்.

ஏன் என்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா எங்களை வழிநடத்துகிறது. அந்த தெம்போடு நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த கட்சி, ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் இருந்தால் டி.டி.வி.தினகரன் வெளியிடட்டும். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு நாங்கள் கூட்டிய கூட்டம் தான் உண்மையான பொதுக்குழு கூட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன் (தஞ்சை தெற்கு), சாமிவேல் (தஞ்சை வடக்கு) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story