சீட் பெல்ட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக வாலிபருக்கு அபராதம்


சீட் பெல்ட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக வாலிபருக்கு அபராதம்
x
தினத்தந்தி 25 Sep 2017 11:00 PM GMT (Updated: 25 Sep 2017 9:23 PM GMT)

தஞ்சை அருகே சீட் பெல்ட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக வாலிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கும், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டிய வாலிபர் ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

அந்த வாலிபர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு கொடுத்தார். அந்த வாலிபர் தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காட்டை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 29) ஆவார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். தஞ்சை மாரியம்மன்கோவில் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள கூட்டுறவு வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக எனது மோட்டார்சைக்கிளில் சென்றேன். அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தஞ்சை தாலுகா போலீசார் எனது வாகனத்தை நிறுத்தினர்.

என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. ஹெல்மெட்டும் வைத்திருந்தேன். ஆனால் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை என கூறி கோர்ட்டுக்கு சென்றால் ரூ.2,500 செலுத்த வேண்டும் என்றும், இங்கே செலுத்தினால் ரூ.500 என்று கூறினர். மோட்டார்சைக்கிளின் சாவியையும் எடுத்துக்கொண்டனர். நான் வேறு வழி இன்றி ரூ.500 பணத்தை கொடுத்து விட்டு வாகனத்தை மீட்டு வந்தேன். ஆனால் பணம் வாங்கியதற்கான ரசீது எதுவும் தரவில்லை. தங்களது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தும் வகையில் பொதுமக்களை மிரட்டியும், என்னிடமும் பணம் பறித்த சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார். 

Related Tags :
Next Story