ராமநகர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


ராமநகர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2017 9:49 PM GMT (Updated: 25 Sep 2017 9:49 PM GMT)

ராமநகர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். சக மாணவர்களுடன் சேர்ந்து ‘செல்பி‘ எடுத்த போது இந்த விபரீதம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகர் அருகே வசித்து வருபவர் கோவிந்த், ஆட்டோ டிரைவர். இவரது மகன் விசுவாஸ் (வயது 17). இவர், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் (என்.சி.சி) விசுவாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23-ந் தேதி அந்த கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை சார்பில் ராமநகர் மாவட்டத்தில் நடந்த முகாமிற்கு விசுவாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றிருந்தார்கள். அவர்களை விரிவுரையாளரான கிரீஸ் அழைத்து சென்றிருந்தார்.

பின்னர் நேற்று முன்தினம் மதியம் ராமநகர் மாவட்டம் ககலிபுரா அருகே ராவுகோட்லு கிராமத்தில் உள்ள ஆஞ்சனேய சாமி கோவிலுக்கு மாணவர்கள் சென்றார்கள். அங்குள்ள குளத்தில் மாணவர்கள் அனைவரும் குளித்தார்கள். அப்போது விசுவாசும் குளத்தில் இறங்கி குளிக்க ஆரம்பித்தார். அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் குளத்தின் கரைப்பகுதியிலேயே நின்று குளித்து கொண்டிருந்தார். இந்த நிலையில், குளத்தின் கரைப்பகுதியில் நின்று அனைத்து மாணவர்களும் ‘செல்பி‘ எடுத்தார்கள்.

தண்ணீரில் மூழ்கி மாணவர் சாவு

அப்போது எதிர்பாராத விதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு விசுவாஸ் சென்று விட்டார். இதனால் அவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை கவனிக்காத சக மாணவர்கள் ‘செல்பி‘ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்கள். இதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்த விசுவாஸ் பரிதாபமாக இறந்து விட்டார். பின்னர் சக மாணவர்கள் குளத்தில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அப்போது தான் விசுவாஸ் இல்லாததை கண்டு மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், ‘செல்பி‘ எடுத்த புகைப்படங்களை செல்போனில் ஒரு மாணவர் பார்த்த போது, மற்ற மாணவர்களுக்கு பின்னால் குளத்தில் விசுவாஸ் மூழ்குவது தெரிந்தது. இதுபற்றி உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து குளத்தில் இருந்து விஷ்வாஸ் உடலை மீட்டார்கள். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குவாதம்

போலீஸ் விசாரணையில், தேசிய மாணவர் படை சார்பில் நடந்த முகாமிற்கு வந்த மாணவர்கள் கோவில் குளத்தின் கரையில் நின்று ‘செல்பி‘ எடுத்தபோது எதிர்பாராத விதமாக விசுவாஸ் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. மேலும் ‘செல்பி‘ எடுக்கும் ஆர்வத்தில் மாணவர்கள் கூச்சலிட்டதால், விசுவாஸ் தண்ணீரில் மூழ்கியபோது, அவர் எழுப்பிய அபயக்குரல் கேட்காமல் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மாணவர் விசுவாசின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து நேற்று மதியம் விசுவாசின் உடலை அவரது உறவினர்கள் நேஷனல் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடலை உள்ளே எடுத்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரி நிர்வாகம், விசுவாஸ் உறவினர்கள் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது விசுவாஸ் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அவரது உறவினர்களிடம் போலீசார் கூறினார்கள்.

ரூ.3 லட்சம் நிதி உதவி

பின்னர் விசுவாஸ் உடல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு, விசுவாசின் உடல் கல்லூரியில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. அதே நேரத்தில் விசுவாஸ் சாவுக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்றும், மாணவர்கள் குளத்தில் இறங்கி குளித்தபோது, அவர்களை அழைத்து சென்ற விரிவுரையாளர் கிரீஸ் அங்கு இல்லாததால் தான் விசுவாஸ் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பலியான விசுவாசின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விரிவுரையாளர் கிரீஸ் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கிரீசை தேடிவருகின்றனர். 

Next Story