கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 Sep 2017 8:00 AM GMT (Updated: 26 Sep 2017 5:57 AM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் நேற்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதகை திறந்து வைத்தார்.

கூடலூர்,

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடி நடைபெறும். இந்த பகுதிக்கு தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதமாகியது. குடிநீருக்கு மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

அணையின் நீர்மட்டம் 127.60 அடியாக உயர்ந்தது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள், பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. முன்னதாக தேக்கடியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணையின் மதகு பகுதியில் உள்ள பொத்தானை அழுத்தி மதகை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பார்த்திபன் எம்.பி., எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., முல்லைப்பெரியாறு வைகை வடிநில பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உத்தமபாளையம் தாசில்தார் சண்முகம், கம்பம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நாராயணன், தர்வேஷ்மைதீன் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
152 அடி உயரம் உடைய முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உள்ளது. நேற்றைய நிலவரப்படி, 126.80 அடி நீர்மட்டம் இருந்தது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 658 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 7 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வீதம் வெளியேறியது. முதல் போக பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கரும், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கரும், போடி தாலுகாவில் 488 ஏக்கரும் வீதம் மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன் அடையவேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் குறைந்தால், முறை வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story