அண்டார்டிகாவில் அதிக எண்ணிக்கையில் மடியும் பென்குயின்கள்


அண்டார்டிகாவில் அதிக எண்ணிக்கையில் மடியும் பென்குயின்கள்
x
தினத்தந்தி 21 Oct 2017 5:31 AM GMT (Updated: 21 Oct 2017 5:31 AM GMT)

2015–ம் ஆண்டின் இனப்பெருக்கக் காலத்தில் பிறந்த அடேலி பென்குயின் குஞ்சுகளும் ஒன்றுகூடப் பிழைக்கவில்லை.

ண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் ஒரு பென்குயின்கள் தொகுப்பில் இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றிப் பட்டினியால் இறந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

குறிப்பிட்ட அடேலி வகை பென்குயின் குஞ்சுகள் மொத்தமாக இறப்பது ஐந்தாண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.

அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அளவுக்கும் அதிகமான பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் நீண்டதூரம் கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், உணவு கிடைக்கத் தாமதமாகி பட்டினியால் அந்த இளம் குஞ்சுகள் இறந்துள்ளன.

இதேபோல கடந்த 2015–ம் ஆண்டின் இனப்பெருக்கக் காலத்தில் பிறந்த அடேலி பென்குயின் குஞ்சுகளும் ஒன்றுகூடப் பிழைக்கவில்லை.

சுமார் 36 ஆயிரம் பென்குயின்கள் வாழும் அந்த பென்குயின் தொகுப்பில் கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அந்தப் பகுதியில் இறால் வகை மீன்கள் பிடிக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அங்கு பென் குயின்களுக்கு உணவுக்கான போட்டி குறைந்து அவை உணவு தேடி நீண்டதூரம் செல்வது குறையும் என்றும், அதனால் அடேலி வகை பென் குயின்கள் உள்பட அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்படும் என்றும் ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.

அண்டார்டிகாவில் கடந்த 2010–ம் ஆண்டு முதல் பென்குயின்களின் எண்ணிக்கையைக் கண்காணித்துவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழுவுக்கு அந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.

அண்டார்டிகா கடல்வாழ் உயிரின பாதுகாப்புக்கான ஆணையத்தில் 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆணையத்தின் கூட்டத்தில், இறால் வகை மீன்பிடிப்புக்கான தடை குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது.

‘‘பென்குயின்களைப் பற்றி பலரும் கொண்டுள்ள கருத்துக்கு மாறானதாக இந்த மோசமான நிகழ்வு அமைந்துள்ளது’’ என்று ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ அமைப்பின் துருவத் திட்டங்களுக்கன தலைவர் ரேட் டவ்னி தெரிவித்துள்ளார்.

‘‘அடேலி பென்குயின்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மோசமான இனப்பெருக்கக் காலத்தைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அந்தப் பகுதியில் பென்குயின்களின் உணவாக உள்ள இறால் வகை மீன்களைப் பிடிப்பதை அனுமதிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது’’ என்பது டவ்னியின் கருத்து.

‘‘கிழக்கு அண்டார்டிகா பகுதியில் புதிய கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்புப் பகுதி ஒன்றை உருவாக்கி பென்குயின்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும்’’ என்றும் அவர் யோசனை கூறியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது பென்குயின்களை காப்பாற்றியாக வேண்டும்!

Next Story