கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மாணவிகளுக்கு களப்பணி பயிற்சி


கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மாணவிகளுக்கு களப்பணி பயிற்சி
x
தினத்தந்தி 26 Oct 2017 7:57 AM GMT (Updated: 26 Oct 2017 7:57 AM GMT)

கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு களப்பணி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு மருத்துவர்கள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மருத்துவ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளில் ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவிகளை பகுதி வாரியாக குழுக்களாக ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு கூடுதல் பயிற்சியாகவும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு பற்றிய கூடுதல் விழிப்புணர்வும் ஏற்படும்.

அதன் அடிப்படையில் கொசுப்புழு ஒழிப்பு களப்பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவிகளுக்கு ஏடிஸ் கொசுப்புழுவினால் ஏற்படும் பாதிப்புகள், கொசுப்புழு உற்பத்தியை கண்டறிவதற்கான நடைமுறைகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரத்த அணு கணக்கீட்டு புதிய கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. தேவைப்படும் நபர்கள் தங்களது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இக்கருவியினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், காச நோய் துணை இயக்குனர் முனியரசு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், மண்டல மருத்துவ அலுவலர் விநாயகமூர்த்தி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாமுண்டீசுவரி உள்பட அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர். 

Next Story