பள்ளத்தை கடக்க லாரி சக்கரத்துக்கு அடியில் ரே‌ஷன் அரிசி மூட்டையை பயன்படுத்தியதால் பரபரப்பு


பள்ளத்தை கடக்க லாரி சக்கரத்துக்கு அடியில் ரே‌ஷன் அரிசி மூட்டையை பயன்படுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Oct 2017 11:15 PM GMT (Updated: 29 Oct 2017 6:24 PM GMT)

நெல்லை மேலப்பாளையத்தில் பள்ளத்தை கடப்பதற்கு மணல் மூட்டை போல், ரே‌ஷன் அரிசி மூட்டையை லாரி சக்கரத்துக்கு அடியில் பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

சமூக வலைத்தளங்களில் பல்வேறு பகுதியில் நடைபெறும் ருசிகர சம்பவங்கள் மற்றும் பரபரப்பு சம்பவங்கள் உடனுக்குடன் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான அரிசியை தவறான வழியில் தொழிலாளர்கள் பயன்படுத்திய சம்பவம் குறித்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:–

நெல்லை மாவட்டத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. அந்தந்த தாலுகா தலைநகரங்களில் உள்ள குடோன்களில் அரிசி, பருப்பு வகைகள், சீனி உள்ளிட்டவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, லாரிகள் மூலம் பகுதி வாரியாக ரே‌ஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவ்வாறு ஒருசில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவில் உள்ள ரே‌ஷன் கடைக்கு அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது சிமெண்டு ரோட்டில் இருந்து ரே‌ஷன் கடைக்கு லாரியை திருப்பினர். பின்பக்க சக்கரம் அங்குள்ள பள்ளத்தில் இறங்கிச் செல்ல வேண்டி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளம் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. அதில் லாரி இறங்கி விடக்கூடாது என்று டிரைவர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கருதினர். எனவே அந்த பள்ளத்தில் கல் அல்லது மண்ணைக் கொண்டு நிரப்பி கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

லாரியில் இருந்து தொழிலாளர்கள் ஒரு அரிசி மூட்டையை கீழே இறக்கினர். பின்னர் அங்குள்ள பள்ளத்தில் மணல் மூட்டை போல் ரே‌ஷன் அரிசி மூட்டையை போட்டனர். அதன் மீது லாரியை ஏற்றி கடந்து சென்றனர். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் அரிசி மூட்டை வெடித்தது. இதில் பள்ளத்தில் அரிசி கொட்டி வீணாகப் போனது.

இதையடுத்து தொழிலாளர்கள் அந்த அரிசி மூட்டையை வெளியே தூக்கியபோது பாதிக்கும் மேற்பட்ட அரிசி கீழே கொட்டி சகதியில் சிதறியது. அதையும் சில தொழிலாளர்கள் அள்ளி மூடையில் போட்டனர். அப்போது ஒரு தொழிலாளி அந்த மூட்டையை எடுக்க வேண்டாம், அப்படியே வீசி விடுங்கள் என்று கூறுவதாகவும் காட்சி உள்ளது.

இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடும் வறட்சியால் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் ரே‌ஷன் அரிசியையே சாப்பாட்டுக்கு பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ரே‌ஷன் கடையில் அரிசி, சீனி, மண்எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கும்போது அளவு குறைவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வருகிறது. இந்த நிலையில் அவற்றை வினியோகம் செய்யும்போது இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் சாப்பிட பயன்படுத்தும் அரிசியை மணல் மூட்டை போல் சகதிக்குள் போட்டு தவறாக பயன்படுத்திய தொழிலாளர்கள் மீதும், லாரி டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story