பள்ளிக்கூட மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தொழிலாளி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


பள்ளிக்கூட மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தொழிலாளி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 Nov 2017 11:00 PM GMT (Updated: 6 Nov 2017 7:33 PM GMT)

பள்ளிக்கூட மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கஸ்பாநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய தங்கைக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கடத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் விஜயகுமார் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் விஜயகுமார் பழகி உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.

அந்த சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி விஜயகுமார் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிஉள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 23–8–2016 அன்று மாணவியை விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு கடத்தி சென்றார்.

கூடலூர் சாவடிபேட்டை பொன்வயல் பகுதியை சேர்ந்த மதபோதகரான முனியாண்டி என்கிற ரமேஷ் (41) என்பருவடைய வீட்டில் வைத்து கடத்தி வந்த மாணவியின் கழுத்தில் விஜயகுமார் தாலி கட்டினார். விஜயகுமாருக்கு உதவியாக அவருடைய நண்பரான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா அழகியபாண்டிபுரத்தை சேர்ந்த ஜோசப்ராஜா (27) உடனிருந்தார். அதன்பின்னர் விஜயகுமாரும், அந்த மாணவியும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்கள்.

இந்தநிலையில் மாணவியின் பெற்றோர், தங்களது மகளை விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டதாக கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். பிறகு கூடலூரில் இருந்த மாணவியை போலீசார் மீட்டதுடன், அவரை கடத்திய விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக இருந்த முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனையும், கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மாணவிக்கு தாலிகட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனையும், தாலி கட்டியதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதால் விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதமும், முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி திருநாவுக்கரசு பரிந்துரை செய்து உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.


Next Story