புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்: தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்: தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 11:00 PM GMT (Updated: 7 Nov 2017 7:46 PM GMT)

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட மேம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு, கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.52 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மேற்கு பகுதியில் இறங்கும் இடத்தில் நாஞ்சிக்கோட்டை சாலை சந்திப்பும் சேருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த பாலம் கட்டப்படவில்லை என்றும் கூறி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படவில்லை.

வருகிற 29-ந் தேதி தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த பாலத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வண்டிக்காரத்தெருவில் பாலத்தின் கிழக்கு பகுதி இறக்கத்தில் போடப்பட்டுள்ள தார் சாலையில் 100 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதேபோல பக்கவாட்டு சுவரிலும் விரிசல் காணப்பட்டது. இதை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து, விரிசலை சரி செய்ய நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் தார் ஊற்றி சரி செய்தனர்.

மேலும் பாலத்தின் வழியாக யாரும் செல்லாத வகையில் பெரிய இரும்பு கம்பிகளை குறுக்கே போட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்றுகாலை இந்த கம்பிகள் மீது ஏறி சென்ற பல்வேறு கட்சி, அமைப்பினர் விரிசல் ஏற்பட்ட இடத்தின் அருகில் நின்று திடீரென பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி பாலம் கட்டப்படவில்லை. பாலத்தின் நீளத்தை குறைந்து அதுவும் அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தரமாக கட்டப்படாததால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட இடத்தில் மட்டும் தார் ஊற்றி மூடிவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். இந்த பாலம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது. மேலும் இதை மரண பாலம் என்று பெயர் சூட்டி எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரை படத்தின் படி பாலத்தை கட்ட வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு கருதி பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆய்வும் செய்யாமல் பாலத்தை திறந்தால் தஞ்சைக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம். விரிசலை சரி செய்ய தார் ஊற்றிய போது அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலத்திற்கே முதலுதவி செய்வதாக கூறினர். மனிதனுக்கு தான் முதலுதவி செய்வதை பார்த்து இருக்கிறேன். ஆனால் பாலத்திற்கே முதலுதவி செய்யப்பட்டது தஞ்சையில் மட்டும் தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story