கல்லூரி மாணவியை கடத்திய வழக்கில் வேன் டிரைவர் கைது


கல்லூரி மாணவியை கடத்திய வழக்கில் வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 11:00 PM GMT (Updated: 9 Nov 2017 9:11 PM GMT)

தாராபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வழக்கில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அலங்கியம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மணக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 31-ந்தேதி கல்லூரிக்கு சென்று ஹால்டிக்கெட் பெற்றுக்கொண்டு மணக்கடவு வருவதற்கு தாராபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் அந்த மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

அதற்கு அந்த மாணவி திட்டியதால், ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மாணவியை தாக்கியதோடு, அவர் வைத்திருந்த செல்போனையும் பிடுங்கி உடைத்தெறிந்து விட்டு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் குறித்த அவருடைய தாயிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி தான் பிளஸ்-2 படித்த பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வாங்க சென்று விட்டார். அன்றைய தினம் மதியம் அந்த மாணவியின் வீட்டிற்கு 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 5 வாலிபர்கள் மாணவியின் தாயை அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு மடிக்கணினி வாங்க சென்ற மாணவி அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயும், உறவினர்களும் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனாலும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தாய் அலங்கியம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் “எனது மகளை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே எனது மகளை மீட்டு தரவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை கடத்தி சென்றதாக தளவாய்பட்டிணத்தை சேர்ந்த வேன் டிரைவர் தங்கதுரை(வயது22) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தளவாய்ப்பட்டினம் மைத்தங்கரையில் தங்கதுரை கல்லூரி மாணவியுடன் நிற்பதாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் விரைந்து சென்று தங்கதுரையை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 1-ந்தேதி கடத்திச்சென்றதாகவும், போலீஸ் தன்னை பிடிக்காமல் இருக்க தமிழகம் மற்றும் கேரளாவில் முக்கிய நகரங்களில் பஸ்சிலேயே பயணம் செய்ததும் தெரிய வந்தது. கையில் இருந்த பணம் செலவானவுடன் தளவாய்ப்பட்டினம் வந்துள்ளனர். இதையடுத்து கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர் தங்கதுரையை கைது செய்து தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட கல்லூரி மாணவி திருப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story