மூளைக்கு முக்கியமானவை


மூளைக்கு முக்கியமானவை
x
தினத்தந்தி 19 Nov 2017 7:27 AM GMT (Updated: 19 Nov 2017 7:27 AM GMT)

மன அழுத்தம் பெண்களின் ஆயுட்காலத்தை குறைத்து விடும் ஆபத்து கொண்டது. மனநலத்தை சீராக பராமரிப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

ன அழுத்தம் பெண்களின் ஆயுட்காலத்தை குறைத்து விடும் ஆபத்து கொண்டது. மனநலத்தை சீராக பராமரிப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சிலவகை உணவுபதார்த்தங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். அத்தகைய உணவுகளை பார்ப்போம்.

* வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மனநிலையும் சீராக இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும். உணவில் காளான்கள், முட்டை, சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

* கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவு வகைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவை கார்போஹைட்ரேட் நிரம்பப்பெற்றவை. அவைகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சிகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரத சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

* மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பதார்த்தங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வை குறைக்கவும் உதவுகின்றன.

* மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வது நல்லது. அதிலிருக்கும் நல்ல கொழுப்பு, மூளை வேகமாக செயல்பட துணைபுரியும்.

* காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது.

* தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை சாலட்டுகளாக மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

* பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இதயத்திற்கு நல்லது. மனநலனுக்கும் நன்மை சேர்க்கும். 

Next Story