தென்னை ஓலை பொம்மைகள்


தென்னை ஓலை பொம்மைகள்
x
தினத்தந்தி 19 Nov 2017 7:35 AM GMT (Updated: 19 Nov 2017 7:34 AM GMT)

கிராபிக்ஸ் டிசைனராக வேலை பார்த்தவர் தற்போது குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்களை தென்னை ஓலையில் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

கிராபிக்ஸ் டிசைனராக வேலை பார்த்தவர் தற்போது குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்களை தென்னை ஓலையில் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் நவ்ஷித் பரம்மாள். கத்தார் மற்றும் துபாயில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த இடமான கேரள மாநிலம் கண்ணூரில் வந்து தங்கிவிட்டார். பரபரப்பான நகர வாழ்க்கையை விட இயற்கையான சுற்றுச்சூழல் பின்னணியில் வாழ்வதுதான் தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். கைவினை கலைவேலைப் பாடுகள் மீது ஆர்வம் கொண்ட அவர், சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் விதத்தில் கலைப்பொருட்களை உருவாக்க ஆர்வம் காட்டுகிறார்.

‘‘நான் கிராபிக்ஸ் டிசைனராக பரபரப்பான வாழ்க்கைக்குள் என்னை இணைத்துக் கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும் வேகவேகமாக கிளம்பி வேலைக்கு புறப்பட்டுச் சென்று, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சிரமப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். வேலையிலும் முழு கவனத்தை செலுத்த முடியாமல் மன அழுத்தம் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். பணம் சம்பாதித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. என் வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்றமுடியவில்லை. நான் சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்க ஆசைப்பட்டேன்” என்கிறார்.

சிறுவர்களின் விளையாட்டு பொருட்களில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பயன்பாடு கொண்டவையாக இருப்பதால் அதற்கான மாற்று பொருட்களை தென்னை ஓலையில் உருவாக்க தொடங்கி இருக்கிறார். முதலில் மீன், பறவை உருவம் கொண்ட பொம்மைகளை உருவாக்கி இருக்கிறார். பின்னர் கூடைகள், தொப்பிகள், பந்துகள், விசில், பூக்கள், வெட்டுக்கிளிகள், சிறுவர்கள் விரும்பி அணியும் கண்ணாடிகளை தயாரித்து இருக்கிறார்.

‘‘சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் விலைமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. கடைகளிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, குழந்தைகள் தாங்களாகவே தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை உருவாக்க முடியும் என்று எண்ணினேன். முதல்கட்டமாக நான் பயிற்சி எடுத்தேன். இப்போது என்னை பார்த்து சிறுவர்களும் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகளை உருவாக்க தொடங்கி விட்டார்கள்’’ என்கிறார்.

நவ்ஷித் விவசாய வேலைகளிலும் ஆர்வம் காட்டுகிறார். பசுமாடுகளை வளர்க்க பண்ணை ஒன்றையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

Next Story