பிருந்தா காரத் நினைவலைகள்


பிருந்தா காரத் நினைவலைகள்
x
தினத்தந்தி 19 Nov 2017 7:39 AM GMT (Updated: 19 Nov 2017 7:38 AM GMT)

பிருந்தா காரத் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர். கட்சி பணிகளையே வாழ்க்கையாக்கிக்கொண்டவர்.

பிருந்தா காரத் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர். கட்சி பணிகளையே வாழ்க்கையாக்கிக்கொண்டவர். கட்சியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும், குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் கட்சிப்பணியாற்றுவேன் என்றும் முடிவு செய்துவிட்டு அதையே கடைப்பிடித்தவர். இவரது கணவர் அதே கட்சியில் பிரபலமான தலைவர் பிரகாஷ் காரத். 70 வயதான பிருந்தா காரத்தின் நினைவலைகள்:

“வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் 100 சதவீதம் சரியானது ஒரே ஒரு முடிவுதான். கட்சியில் சேரவேண்டும் என்று நான் எடுத்த முடிவுதான் அது” என்று கூறும் பிருந்தா காரத், 22-வது வயதில் கட்சியில் சேர்ந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர் லண்டனில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

“கட்சிப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது நான் பிரகாசுடன் காதல் கொண்டேன். எனது வாழ்க்கையில் மிக முக்கியமானது கட்சிதான். கட்சியில் இல்லாத ஒருவரை திருமணம் செய்வது என்பது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல், ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல் திருமணத்திற்கான உறுதிமொழியை தனித்தனியாக தயாரித்தோம். நாங்கள் அதை வாசித்தபோது கேட்டவர்கள் வியந்துபோனார்கள். இரண்டிலும் சாராம்சம் ஒரே மாதிரிதான் இருந்தது. ‘எங்கள் அன்பும், நம்பிக்கையும், பங்காளித்துவமும் எப்போதும் எங்கள் செயல்பாட்டையும், புரட்சி எண்ணங்களையும் பலப்படுத்தும்’ என்றிருந்தது” என்கிறார்.

1975-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி டெல்லியில் வீணா மஜூம்தார் வீட்டில் அந்த உறுதிமொழியை கேட்டு, இவர்களது திருமண சடங்கில் கலந்துகொண்டர்கள் 25,30 பேர்தான்.

இந்த தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களுக்கு தாய்மை உணர்வை வெளிப் படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கவே செய்கிறது.

“எனது சகோதரர் சுரஜித், சகோதரி ஜூனி இருவரும் அகால மரணமடைந்துவிட்டார்கள். அவர்களது பிள்ளைகளை நாங்கள் வளர்த்தோம். அந்த சூழ்நிலையை நினைத்துப்பார்க்கும்போது, மரணத்தில் ஏற்பட்ட துக்கம் பின்பு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது என்றுகூட சொல்லலாம். அதனால் நாங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் அன்பை அனுபவிக்கிறோம்” என்று கூறும் பிருந்தா காரத், தன்னை வெகுவாக பாதித்த துக்கம் ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

“ஜூனியின் மகள் செனாலியின் மகன் இஷான் எனது பேரன். அவனது மரணம் என்னை வாட்டிவதைத்துவிட்டது. கடந்த 70 வருடங்களில் நான் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறேன். மரணம் பலமுறை என் அருகில் வந்திருக்கிறது. ஆனாலும் அவன் இறந்த துக்கத்தில் இருந்து இப்போதும் என்னால் நீங்கமுடியவில்லை” என்கிறார்.

பெண் என்ற நிலையில் இவரால் எப்படி கட்சிக்குள் செயல்பட முடிந்தது? என்ற கேள்விக்கு..

“சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை கடினமானது. கட்சியில் அவ்வளவு கடினம் இருப்பதாக கருதவில்லை. சமூகத்தில் நடைபெறும் பிரச்சினைகள் கட்சிக்குள் பெருமளவு தீர்க்கப்பட்டுவிடுகிறது. ஆனாலும் பாலின அடிப்படையில் கட்சிக்குள் ஏமாற்றங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் உண்டு. அதே நேரத்தில் முக்கியத்துவம் கிடைத்ததும் உண்டு. அரசியல் போராட்டங்கள் வாயிலாக பெண்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து கொண்டு சென்று தீர்க்கும் வாய்ப்பு களும் கிடைத்திருக்கின்றன” என்கிறார்.

பிருந்தாவும், பிரகாஷ் காரத்தும் முதன் முதலில் சந்தித்தது லண்டனில். அங்கே பிருந்தா வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அங்குள்ள பல் கலைக்கழகத்தில் பிரகாஷ் எம்.எஸ்சி. படித்துக் கொண்டிருந்தார். லண்டனில் இந்திய தூதரகத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள பிரபல திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே வந்திருந்தார். அந்த விழாவில் கலந்துகொள்ள இவர்கள் இருவரும் அறிமுகமற்ற நிலையில் தனித்தனியாக சென்றிருக் கிறார்கள். அங்கு சத்யஜித்ரேயிடம் நிறைய கேள்விகள் பிருந்தா கேட்க, யார் அந்த பெண் என்ற கோணத்தில் பிரகாஷ், பிருந்தாவை பார்த்துக்கொண்டிருந்திருக் கிறார். அங்குதான் இவர்களது பார்வை முதன் முதலில் பரிமாறப்பட்டிருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த சூரஜ்லால்தாஸ், கொல்கத்தாவை சேர்ந்த ஓஸ்ருகோனா மித்ராவின் மகளான பிருந்தா கொல்கத்தாவிலும், டேராடூனிலும், டெல்லியிலும் பள்ளி- கல்லூரி படிப்பை முடித்தார். பின்பு நாடகம் தொடர்புடைய கல்வி கற்க ஆசைப்பட்டார். ஆனால் தந்தையோ, சுயமாக சம்பாதிக்கத் தொடங்கு என்றதால் முதலில் கொல்கத்தாவில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்பு லண்டனுக்கு இடமாற்றம் பெற்றார். அங்கு வேலைபார்த்துக்கொண்டே தான் விரும்பிய நாடகத் துறை தொடர்புடைய கல்வியையும் கற்றார்.

அந்த காலகட்டத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண்கள் பாவாடையும், கோட்டும் அணியவேண்டும் என்று ஹீத்ரு விமான நிலைய மேலாளர் உத்தரவிட்டதற்கு எதிராக இவர் போராட்டம் நடத்தினார். புடவை கட்ட அனுமதி வேண்டும் என்பது பிருந்தாவின் கோரிக்கையாக இருந்தது. கோரிக்கையில் வெற்றி பெறவும் செய்தார். ‘ஏர் இந்தியாவில் பணிபுரியும் எல்லா பெண்களும் புடவை உடுத்திக்கொள்ளலாம்’ என்று உத்தரவிடப்பட்டிருக் கிறது.

“எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது 1953-ல் எனது தாயார் இறந்துபோனார். 7 வருடங்கள் கழித்து என் தந்தை சுசீலா குருவிளா என்பவரை மறுமணம் செய்தார். கேரளாவை சேர்ந்த அவர் கொல்கத்தாவில் வசித்தார். அவர் முன்னாள் மத்திய மந்திரி ஜான் மத்தாயியின் மகன் திலீப்பின் முதல் மனைவி. அவர்களுக்குள் விவாகரத்தாகி, பல வருடங்கள் கடந்த பின்பு சுசீலா, என் தந்தையை மணந்தார். இருவருக்குமிடையே இருபது வயது வித்தியாசம் இருந்தது. சுசீலாவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனும் எங்களுடனே வளர்ந்தார். சுசீலா சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். நான் நன்றாக சமைப்பேன். கடுகு அரைத்து பெங்காலி மீன் குழம்பு சுவையாக தயாரிப்பேன். இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. ஆனாலும் பேரக்குழந்தைகள் ஆசையோடு கேட்டால் தயாரித்து கொடுப்பேன்” என்கிறார், உற்சாகத் தலைவி பிருந்தா காரத். 

Next Story