வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்


வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்
x
தினத்தந்தி 19 Nov 2017 11:00 PM GMT (Updated: 19 Nov 2017 10:11 PM GMT)

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளை ஒருங்கிணைத்து 9,351 காலி பணியிடங்களை நிரப்ப 2018 பிப்ரவரி 11-ல் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த போட்டித்தேர்வில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் 80 லட்சம் பேர் படித்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

விவசாயம் உள்ளிட்ட கூலித்தொழில் செய்து படிக்க வைத்த பெற்றோருக்கு பாரமாக இருக்கிறோமே? என்று மனம் வெதும்பி இருக்கின்றனர். வேலை பெற்று தங்களுடைய பெற்றோர் படும் துன்பத்தை குறைக்காலம் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

கர்நாடகம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித்தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கடும் கண்டனத்துக்கு உரியது. பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பெற்றவர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.

இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வேலையின்றி தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் அரசு துறை மற்றும் தனியார் துறைகளில் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது அசாம் மாநிலத்தில் எழுந்ததுபோன்று எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் பிரச்சினை வெடிக்கும் நிலை ஏற்படும். எனவே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story