தமிழக அரசு துறைகளில் 9351 ‘குரூப்-4’ பணியிடங்கள்


தமிழக அரசு துறைகளில் 9351 ‘குரூப்-4’ பணியிடங்கள்
x
தினத்தந்தி 20 Nov 2017 7:00 AM GMT (Updated: 20 Nov 2017 7:00 AM GMT)

தமிழக அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.

தற்போது கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணியிடங்களை நிரப்ப, இந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுவரை கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு தனியே தேர்வு நடத்தப்பட்டது. தற்போது ‘குரூப்-4’ பணிகளுக்கான தேர்வுடன் இணைத்து நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பின்படி மொத்தம் 9 ஆயிரத்து 351 பணியிடங்கள் நிரப்பப்படு கிறது. இதில் வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) பணிக்கு 494 இடங்கள் உள்ளன. இளநிலை உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 96 இடங்களும், டைப்பிஸ்ட் பணிக்கு 3 ஆயிரத்து 463 இடங்களும் உள்ளன. இவை தவிர இளநிலை உதவியாளர் (செக்யூரிட்டி) - 205, பில் கலெக்டர் - 48, பீல்டு சர்வேயர் - 74, டிராப்ட்ஸ்மேன் - 156, ஸ்டெனோ டைப்பிஸ்ட் - 815 இடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் காணலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட விதத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ பணிகளுக்கு தொழில்நுட்ப திறனும் சோதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-12-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.    
இறுதியில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். இதற்கான எழுத்துத் தேர்வு 11-2-2018 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in/ www.tnpscexams.net/ www.tnpscexams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.

Next Story