திருமணம் செய்வதாக கூறி வாலிபர் ஏமாற்றியதாக சிங்கப்பூர் பெண் கைக்குழந்தையுடன் போராட்டம்


திருமணம் செய்வதாக கூறி வாலிபர் ஏமாற்றியதாக சிங்கப்பூர் பெண் கைக்குழந்தையுடன் போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2017 10:45 PM GMT (Updated: 21 Nov 2017 10:19 PM GMT)

திருமணம் செய்வதாக கூறி புதுவை வாலிபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சிங்கப்பூர் பெண் கைக்குழந்தையுடன் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகைக்கு நேற்று பகலில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். திடீரென அங்கு அவர் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பரபரப்படைந்தனர். உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பாரதி பூங்காவிற்குள் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த பெண் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ்ப்பெண் விக்னேஷ்வரி (வயது 32) என்பது தெரியவந்தது. நர்சிங் படித்துள்ள அவர் மலேசியாவில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

மலேசியாவில் கப்பல் கம்பெனி ஒன்றில் புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது சந்தித்துக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்துள்ளனர்.

இதை பயன்படுத்தி திருமணம் செய்வதாக கூறி வீராம்பட்டினம் வாலிபர் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண் கர்ப்பமானார். இதனால் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த வாலிபரை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததுடன் மலேசியாவில் இருந்து புதுவைக்கு வந்து தங்கிவிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விக்னேஷ்வரி புதுவை வந்து அந்த வாலிபரின் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன்பின் விக்னேஷ்வரி புதுவையில் இருந்து சென்றுவிட்டு பெண் குழந்தையை பெற்றுள்ளார்.

தொடர்ந்து அவர் புதுவை வந்து அந்த வாலிபரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் விக்னேஷ்வரியிடம் மலேசியா சென்று விடுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கவர்னரிடம் புகார் தெரிவிக்கும் விதமாக கவர்னர் மாளிகை முன்பு அந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு விக்னேஷ்வரியை ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணும் அங்கு புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story