கப்பல் ஊழியரின் முதல் மனைவி-உறவினர்கள், கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம்


கப்பல் ஊழியரின் முதல் மனைவி-உறவினர்கள், கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 11:15 PM GMT (Updated: 23 Nov 2017 8:56 PM GMT)

சிங்கப்பூர் பெண்ணை திருமணம் செய்த கப்பல் ஊழியரின் முதல் மனைவி மற்றும் உறவினர்கள் கவர்னர் மாளிகையை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அமர்நாத்(வயது 31). மலேசியாவில் கப்பல் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அங்கு செவிலியராக வேலை செய்த சிங்கப்பூரை சேர்ந்த விக்னேஷ்வரியுடன்(33) பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர். இதனிடையே விக்னேஷ்வரி கர்ப்பமானார்.

இதனை அறிந்த அமர்நாத் விக்னேஷ்வரியிடம் சொல்லாமல் புதுவை திரும்பியுள்ளார். இதனையடுத்து மலேசியா போலீசின் உதவியுடன் விக்னேஷ்வரி அமர்நாத் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து புதுவை வந்துள்ளார். அப்போது அமர்நாத்தின் குடும்பத்தினர் விக்னேஷ் வரியை வீட்டிற்குள் சேர்க்காமல் தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியுள்ளனர். இதனையடுத்து விக்னேஷ்வரி மலேசியா சென்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து அவர் குழந்தையுடன் புதுவை வந்து அமர்நாத்தை சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். அவர் மறுப்பு தெரிவிக்கவே கவர்னர் மாளிகை முன்பு தனது குழந்தையுடன் போராட்டம் நடத்தினார்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பெரியகடை போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்ற அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முன்தினம் விக்னேஷ்வரியை வீராம்பட்டினம் கோவிலில் அமர்நாத் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். இது பற்றிய தகவல் அறிந்த உடன் பெரியகடை போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், கோட்டக்குப்பத்தை அடுத்த சோதனைக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகள் அருளரசி(31) தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், அமர்நாத் தனது காதல் கணவன் என்றார். கல்லூரியில் படிக்கும் போது நாங்கள் காதலித்தோம். கடந்த 21-12-2010ம் ஆண்டு கடலூரில் இருவீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டோம். நான் அவர் முதல் மனைவி. திருமணத்திற்கு பின்னர் அவர் 6 மாதம் என்னுடன் குடும்பம் நடத்தினார். இந்த நிலையில் அவருக்கு மலேசியாவில் ஒரு கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது.

அதன் பின்னர் அவர் மலேசியா சென்றார். அடிக்கடி புதுவை வந்து என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். அடிக்கடி செல்போனில் பேசினார். நான் உன்னை விரைவில் மலேசியா அழைத்துச்செல்வேன் என்று கூறி எனக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் போன் செய்தாலும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் விக்னேஷ்வரி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தது தெரியவந்தது. எனது கணவர் எனக்கு வேண்டும். இல்லை என்றால் நான் கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்கவும் தயார் என்றார்.

மேலும் கவர்னரை சந்தித்து முறையிட்ட பிறகுதான் செல்வேன் என அவர் பிடிவாதமாக இருந்தார். இதனையடுத்து கவர்னரை அவர் சந்திக்க சென்றார். ஆனால் அங்கு கவர்னரை சந்திக்க முடியவில்லை. கவர்னர் மாளிகையில் உள்ள அதிகாரிகளை சந்தித்து கூறினார். பின்னர் இது குறித்து மகளிர் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மகளிர் ஆணையத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அருளரசியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கவர்னர் மாளிகை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story