17 ஆண்டுகளாக அச்சத்துடன் தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள்


17 ஆண்டுகளாக அச்சத்துடன் தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Dec 2017 11:30 PM GMT (Updated: 12 Dec 2017 5:44 PM GMT)

ஆலந்தூர்–ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கடந்த 17 ஆண்டுகளாக பொதுமக்கள் அச்சத்துடன் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். உடனடியாக நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 2001–ல் கேட் மூடப்பட்டது சென்னையை அடுத்த ஆலந்தூர்–ஆதம்பாக்கம் இடைய

ஆலந்தூர்,

ஆலந்தூர்–ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கடந்த 17 ஆண்டுகளாக பொதுமக்கள் அச்சத்துடன் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். உடனடியாக நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூர்–ஆதம்பாக்கம் இடையே ரெயில் மார்க்கத்தில் பொதுமக்கள் கடந்து செல்ல ரெயில்வே கேட் இருந்தது. ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த 2001–ம் ஆண்டு அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது.

இந்த ரெயில்வே கேட் வழியாக ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூருக்கு செல்ல பொதுமக்களும், அருகே 3 உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளும் பயன்படுத்தி வந்தனர். ரெயில்வே கேட் மூடப்பட்டபின் தண்டவாளத்தை யாரும் கடந்து செல்ல கூடாது என்று கூறப்பட்டது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை இருந்தது.

அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

கடந்த 17 ஆண்டுகளாக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருப்பதால் ஆபத்தை அறியாமல் தண்டவாளத்தை கடந்து சென்ற சுமார் 60–க்கும் மேற்பட்டவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர்.

இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்திற்கு ஆலந்தூர் நகராட்சி நிதியை தந்ததால் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு ஆலந்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2011–ம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்க ரூ.2 கோடியே 29 லட்சத்தை ரெயில்வே துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.

நிதி ஒதுக்கப்பட்டு அவசரமாக பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி ரெயில்வே துறைக்கு நிதி ஒதுக்கி சுமார் 5 ஆண்டுகளாகியும் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை.

இதுபற்றி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக சம்பவ இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். ஆனால் அந்த பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் செல்வதால் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், இப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்தும் எந்தவித பணிகளும் தொடங்கவில்லை. ரெயில்வே கேட் மூடப்பட்டு சுமார் 17 ஆண்டுகளாக இந்த பகுதியில் தண்டவாளத்தை பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து வருகின்றனர்.

மாணவ–மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல உயிரையும் பொருட்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி ஒதுக்கிய நிதியில் இப்பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடைமேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ரெயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் விரைவில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story