பேசின்பிரிட்ஜ் பாலத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அலறல்; போக்குவரத்து போலீசார் திணறல்


பேசின்பிரிட்ஜ் பாலத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அலறல்; போக்குவரத்து போலீசார் திணறல்
x
தினத்தந்தி 13 Dec 2017 11:30 PM GMT (Updated: 13 Dec 2017 8:18 PM GMT)

சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே ½ மணி நேரம் ஆகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை,

சென்னை யானைக்கவுனி கண்ணப்பர் திடலில் ரெயில்வே பாலம் ஒன்று உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இந்த பாலம் மூடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் இந்த பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், இந்த பாலத்தில் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பேசின்பிரிட்ஜ் வழியாக திருப்பிவிடப்படுகின்றன.

ஏற்கனவே, வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களுக்கு பிரதான நுழைவு வாயிலாக பேசின்பிரிட்ஜ் உள்ளது. வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை சாரை சாரையாக இந்த வழியில் வருவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதே நேரத்தில், யானைக்கவுனி பாலத்தில் இருந்து திருப்பிவிடப்படும் கனரக வாகனங்களும், தங்கசாலையில் இருந்து வரும் வாகனங்களும் பேசின்பிரிட்ஜ் பாலத்தில் எதிரெதிரே சந்திப்பதால் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் மேலும் கடுமையாகிறது.

நேற்று காலை பேசின் பிரிட்ஜ் பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், அங்கிருந்து வியாசர்பாடி செல்லும் சாலையில் புதிய மேம்பாலம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், அப்பகுதியில் நின்ற போக்குவரத்து போலீசார் படாதபாடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயன்றனர்.

ஒவ்வொரு பகுதியில் இருந்து வரும் வாகனங்களையும் சிறிது நேர இடைவெளியில், சாலையை கடந்து செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதித்தனர். இதனால், சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்குல அங்குலமாகவே நகர்ந்து சென்றன. குறிப்பாக, வியாசர்பாடி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பேசின்பிரிட்ஜ் பாலத்தை கடந்து செல்லவே அந்த வாகன ஓட்டிகளுக்கு ½ மணி நேரத்திற்கும் மேலாக ஆனது.

விரக்தி அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், எரிச்சலுடனேயே சாலையில் முன்னோக்கி சென்றனர். பலர், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாதோ? என்று அச்சம் அடைந்தனர்.

நோயாளி ஒருவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் வாகன நெரிசலில் சிக்கி முன்னேற முடியாமல், ஒலி எழுப்பியபடி தவியாய் தவித்தது. வாகன ஓட்டிகள் பலர் வழி கொடுக்க முயன்றும், ஆம்புலன்ஸ் வாகனத்தால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. கடும் சிரமத்திற்கு இடையே அது ஊர்ந்து சென்றது.

பேசின்பிரிட்ஜ் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தினமும் வாடிக்கையாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், யானைக்கவுனி ரெயில்வே பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படாதது தான். எனவே, அந்த பாலப்பணிகளை ரெயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story