உஷாரய்யா உஷாரு!


உஷாரய்யா உஷாரு!
x
தினத்தந்தி 17 Dec 2017 5:34 AM GMT (Updated: 17 Dec 2017 5:34 AM GMT)

போலீஸ் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்ட இளம் பெண் அவள். நல்ல உயரம், கம்பீரமான தோற்றம் கொண்டவள்.

போலீஸ் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்ட இளம் பெண் அவள். நல்ல உயரம், கம்பீரமான தோற்றம் கொண்டவள். கிராமத்தில் விவசாய வேலைகளை செய்ததால் அவள் உடலும் திடகாத்திரமாக இருந்தது. அவள் கனவு போலீஸ் வேலை என்பதால் அதற்கு தக்கபடி தனது உடலை வலுப்படுத்துவதிலும் அக்கறைகாட்டினாள். அதிகாலை நேரத்தில் தன் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்லும் மூன்று கிலோமீட்டர் தூரத்தை ஓடியே கடப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ‘போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் வைத்தால் நான்தான் முதல் ஆளாக தேர்ச்சிப் பெறுவேன்’ என்றும் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அவளை போலீஸ் வேலைக்கு அனுப்ப பெற்றோருக்கு விருப்பமில்லை. திருமணம் செய்துவைத்துவிட திட்டமிட்டு ரகசியமாக மாப்பிள்ளை தேடினார்கள். அமைந்தது போலீஸ் மாப்பிள்ளை. தான் போலீஸ் ஆக முடியாத ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், போலீஸ்காரரே கணவராக கிடைத்ததால், சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாள்.

மணவாழ்க்கை சந்தோஷமாக சென்றது. 2 குழந்தைகள் பிறந்தார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் பருவத்தை அடைந்ததுமே, கணவரின் சம்பாத்தியம் போதாது என்பதை புரிந்துகொண்டு அவளும் வேலைக்கு செல்ல விரும்பினாள். 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளர்ந்து வரும் சிறுநகரத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது. பகலில் சென்றால் மாலை நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். மதிய ஷிப்டு சென்றால் இரவு பத்து மணிக்குத்தான் திரும்ப முடியும்.

இரவுப் பணி முடிந்து வரும்போது பஸ் கிடைப்பது கடினம். எனவே தனது மொபட்டில் வேலைக்குச் சென்று திரும்பினாள். கிராமத்துப் பகுதிகளை கடந்து வருவதால், வழியில் பிரச்சினை எதையும் அவள் சந்தித்ததில்லை. தனது மொபட்டிலும் போலீஸ் என்று எழுதியிருந்தாள். அதுவும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

அன்று இரவுப் பணி. கணவர் இரண்டு நாட்கள் விடுமுறையில் இருந்தார். போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டிருந்ததால் அவள் அடிக்கடி கணவரின் போலீஸ் சீருடையை அணிந்து அழகு பார்ப்பது உண்டு. அன்று அவளுக்கு அந்த விபரீத ஆசை ஏற்பட்டது. மதியம் வேலைக்கு கிளம்பியபோது கணவரின் சீருடைகளை எடுத்து ரகசியமாக தனது பைக்குள் வைத்துக்கொண்டாள். இரவில் வீடு திரும்பும்போது அந்த உடையை அணிந்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். கணவருக்கு தெரியாமலே இதை செய்ய திட்டமிட்டாள். வீட்டிற்குள் நுழையும்போது கணவர் பார்த்துவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற தைரியம் அவளிடம்இருந்தது.

நினைத்ததுபோல் அன்று இரவு பணி முடிந்ததும் காவலர் சீருடையை அணிந்து கொண்டு, வீட்டிற்குப் புறப்பட்டாள். அவள் வரும் வழியில் ஆற்றுப்பாலம் ஒன்றை கடக்கவேண்டும். இருபக்கமும் மரங்கள் அடர்ந்த பகுதி அது. அவள் பாலத்தை கடந்து சென்றபோது யாரோ ஒருவர் வாகனத்தில் பின்தொடர்வது தெரிந்தது. வண்டியின் வேகத்தை அதிகரித்தாள். சிறிது நேரத்தில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டு அவளை துரத்தினார்கள். அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் அந்த கும்பல், அவளை மடக்கிவிட்டது.

‘ஒத்த பொம்பளையா வேவு பார்க்க வந்தியா?’ என்று கூவிக்கொண்டே தாக்கும் நோக்கத்துடன் ஆவேசமாக நெருங்கியது அந்த கும்பல். அப்போதுதான் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், ‘டேய் இவள் போலீஸ் கிடையாதுடா? இவளை எனக்குத் தெரியும்.. நம்ம பக்கத்து கிராமத்து பொண்ணு..’ என்று கூறி, மற்றவர்களை தாக்கவிடாமல் தடுத்தான்.

பிறகு அடிக்க வந்தவர்களிடம் கைகூப்பிய அவள், சீருடை கணவருக்குரியது என்று கூறிவிட்டு, தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள்.

அது ஒரு மணல் கடத்தல் கும்பல். போலீஸ் சீருடையில் வந்த அவளைப் பார்த்து, போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டது. ஒருவர் மட்டும் வந்திருப்பது தெரிந்ததால் தாக்கிவிடவும் துணிந்திருக்கிறது. அன்றுதான் அவள் போலீஸ் சீருடை பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்ந்திருக்கிறாள். தனது மொபட்டில் போலீஸ் என்று எழுதியிருந்ததையும் அழித்துவிட்டாள்.

போலீஸ், வக்கீல், மீடியா என்றெல்லாம் வண்டியில் எழுதிக் கொண்டு சுற்றுவது பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உண்மையை உணர்த்தத்தான் இந்த சம்பவத்தை சொன்னோமுங்க..!

- உஷாரு வரும்.

Next Story