பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து மேலும் அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து மேலும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 9:56 PM GMT)

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

செங்குன்றம்,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 டி.எம்.சி. ஆகும்.

இந்த ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் தமிழக பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள், கடந்த மாதம் ஆந்திர மாநில அரசிடம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் டிசம்பர் 27-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த 1-ந்தேதி வந்தடைந்தது. மறுநாள்(2-ந் தேதி) பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தது.

கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு வினாடிக்கு 2,150 கனஅடி வீதமாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

முதலில் இந்த நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வெறும் 20 கனஅடியாக வந்து சேர்ந்தது. இது படிப்படியாக உயர்ந்தது. 2 நாட்களுக்கு முன் வினாடிக்கு 275 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை முதல் கிருஷ்ணா நதிநீர் வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 325 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த 1-ந்தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 26.07 அடியாகவும், தண்ணீர் இருப்பு 1,012 மில்லியன் கனஅடியாக வும் இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.82 அடியாகவும், தண்ணீர் இருப்பு 1,140 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story