‘எனது மகனை ஊசி மருந்து செலுத்தியே கொலை செய்துள்ளனர்’ மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் தந்தை கதறல்


‘எனது மகனை ஊசி மருந்து செலுத்தியே கொலை செய்துள்ளனர்’ மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் தந்தை கதறல்
x
தினத்தந்தி 19 Jan 2018 11:30 PM GMT (Updated: 19 Jan 2018 8:33 PM GMT)

டெல்லியில் மரணம் அடைந்த எனது மகனை ஊசி மருந்து செலுத்தியே கொலை செய்துள்ளனர் என்று மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் தந்தை கதறியபடி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 56). இவருடைய மனைவி தனலட்சுமி(48). இவர்களுடைய மகன் சரத்பிரபு(24). இவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து விட்டு மேல் படிப்புக்காக டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ். என்ற மருத்துவக்கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சரத்பிரபு கடந்த 17-ந்தேதி தனது அறையில் உள்ள கழிவறையில் தவறி விழுந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாகவும் அவருடைய நண்பர்கள் சரத்பிரவுவின் தந்தை செல்வமணிக்கு தெரிவித்துள்ளனர். திடீரென மர்மமான முறையில் சரத்பிரபு இறந்த செய்தி பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சரத்பிரபுவின் தந்தை மற்றும் உறவினர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சரத்பிரபுவின் உடல் டெல்லியில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவரின் உடல் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் பாரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது.

உடல் கொண்டு வரப்பட்டதில் இருந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். இரவு 12 மணியளவில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சரத்பிரபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து சரத்பிரபுவின் தந்தையிடம், மாணவனின் இறப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து சரத்பிரபுவின் தந்தை செல்வமணி அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் கதறியபடி கூறியதாவது:-

எனது மகன் தனக்கு தானே கையில் பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக அங்குள்ள ஆஸ்பத்திரி நிர்வாகமும், போலீசாரும் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய்யானது.

ஆனால் எனது மகனின் கழுத்திலும், நெற்றியிலும் ரத்த காயங்கள் உள்ளன. அவனை யாரோ 2 பேர் பிடித்து கொள்ள அவனது கையில் ஊசி மூலம் மருந்தை செலுத்தி உள்ளனர். டெல்லி போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தோம். அவர்கள் 3 சிறப்பு குழுக்கள் அமைத்து இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இது திட்டமிட்ட கொலை தான் என்பது தெரிகிறது. இதனால் இதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இதுபோன்ற உயிரிழப்புகள் தமிழக மக்களுக்கு ஏற்பட கூடாது. இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை கேட்ட அமைச்சர், சரத்பிரபுவின் இறப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சரத்பிரபுவின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இரவு முழுவதும் சரத்பிரபுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story