எச்.ஐ.வி.க்கு ஒரே ஒரு மாத்திரை போதும்?


எச்.ஐ.வி.க்கு ஒரே ஒரு மாத்திரை போதும்?
x
தினத்தந்தி 20 Jan 2018 9:15 AM GMT (Updated: 20 Jan 2018 9:09 AM GMT)

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் வெற்றி காரணமாக, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம் ஒரு மாத்திரை கொடுத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம் ஒரு மாத்திரை மட்டுமே தரும் புதிய சிகிச்சை முறை பன்றிகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மனிதர்களிடம் சோதனை தொடங்க உள்ளதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெதுவாக மருந்துகளை விடுவிக்கும் இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு உதவும் என்றும், தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளும் கஷ்டத்தில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மாத்திரை, சாதாரண குழல் மாத்திரை போன்றே காட்சியளிக்கிறது. ஆனால் மாத்திரையை விழுங்கியதும் வயிற்றை அடையும்போது அதன் வெளிப்புறம் கரைந்துவிடுகிறது. இதையடுத்து கட்டமைக்கப்பட்ட மாத்திரையினுள் இருக்கும் சிறப்பு அமைப்பு திறந்துகொள்கிறது.

நட்சத்திர வடிவில் உருவாக்கப்பட்ட இந்த 4 செ.மீ. பொருள், வயிற்றில் ஏழு நாட்கள் இருக்கும். அது மருந்தை நிதானமாக வெளியே விடுகிறது. குரங்கு உட்பட பல்வேறு பாலூட்டிகளில் இந்த மருந்தை சோதனை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் மனிதர்களுக்கும் சோதனை செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எச்.ஐ.வி. மருத்துவ நிபுணர்கள் இதுபற்றிக் கூறுகையில், “இந்தப் புதிய சிகிச்சை வாய்ப்பு வரவேற்கப்படவேண்டியது. ஆனால் இது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் நிறைய காலம் ஆகும்” என்கின்றனர்.

இந்த நட்சத்திர வடிவம், வயிற்றில் பெரிய அளவில் இருக்கும். ஆனால் உணவு சிறுகுடலில் பயணிப்பதை அனுமதிக்கும். தன்னிடம் உள்ள மருந்துகளை முழுவதுமாக வெளியே விட்ட பிறகு சிதையத் தொடங்கும் இந்த நட்சத்திரம், செரிமானப் பாதை வழியாக வெளியேறிவிடும்.

பன்றிக்குச் செய்யப்பட்ட சோதனையில் ஆராய்ச்சியாளர்கள், டொலுட்கிரேவிர், ரில்பிவிரின், கபோட்டிகிரேவிர் ஆகியவை அடங்கிய மூன்று வைரஸ் எதிர்ப்பு மருந்து களைக் கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், இந்த வாய்வழி மருந்து விநியோக சாதனம் எதிர்காலத்தில் எச்.ஐ. வி.க்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் பயன்படும் என்றனர்.

மலேரியா மருந்தான இவர்மெக்டின் மூலம் ஏற்கனவே பன்றிகளுக்கு முதல்கட்டச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. “நோயாளிகள் தங்களுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதை எளிமையாக்க நாங்கள் ஓர் அமைப்பைக் கொண்டுவர விரும்பினோம்” என ஆராய்ச்சியாளர் ஜியோவன்னி டிராவெர்சோ கூறியுள்ளார்.

“இப்படி மருந்தை மாற்றியமைப்பதால் ஒருநாளைக்கு ஒரு முறை மருந்து எடுப்பதற்குப் பதிலாக ஒரு வாரத்திற்கு ஒரு முறை எடுத்தால் போதுமானதாக இருப்பது வசதியாக இருக்க வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை மருந்து எடுப்பதுகூட சில நோய்களுக்கு சாத்தியமாகலாம்” என்றார் ஜியோவன்னி.

லிண்ட்ரா எனும் நிறுவனம் அடுத்த 12 மாதங்களுக்குள், மனிதர் களுக்கு நீண்ட காலம் நீடித்திருக்கும், வாய்வழியாக கொடுக்கப் படும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கிவருகிறது. எச்.ஐ.வி. போன்றவற்றுக்கான மருந்துகள் நிறைய விலங்கு சோதனைகள் மற்றும் மனிதர்களுக்கு சோதனை நடத்துவதற்கான அனுமதி ஆகியவை கிடைத்தபின்னரே நடக்கும்.

இந்த வகையான மருந்துகள் டிமென்சியா, சீசோபிரெனியா போன்ற மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பல வகை நோயாளிகளுக்குப் பயன்படும் என்கிறார் டாக்டர் ஜியோவன்னி. மேலும், ஏற்கனவே மெதுவாக வெளியிடப்படும் மருந்துகள் ஊசி மூலமாக நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

“இந்த ஆராய்ச்சியின் வளர்ச்சி இன்னமும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. பன்றிகளில் ஆராய்ச்சி செய்ததில் இருந்து நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும் மனிதர்களுக்கு கணித மாதிரி சோதனை செய்யப்படுவதற்கு முன்னால் அந்த மருந்தின் பயன் குறித்து அளவிட வேண்டியுள்ளது” என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Next Story