நாசாவின் நானோ நட்சத்திர கப்பல்!||NASAs-Nano-Star-Ship
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசென்னை
நாசாவின் நானோ நட்சத்திர கப்பல்!
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
36
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 3:51 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 3:51 PM IST
பூமியில் ஏற்படக்கூடிய இயற்கை சீற்றங்களான பூகம்பம், சுனாமி, எரிமலைகள் போன்றவற்றின் காரணமாக பூமியும், அதிலுள்ள மனிதன் உள்ளிட்ட பல ஜீவராசிகளும் அழிவது ஒரு புறமிருக்க, சூரியனுக்குள் எரிந்துகொண்டு இருக்கும், சூரிய வெளிச்சத்துக்கு காரணமான ஹைட்ரஜன் வாயுவானது இன்னும் 540 கோடி ஆண்டுகளில் முழுவதும் தீர்ந்துபோகும் என்றும், அதன் காரணமாக சூரியன் சிவப்பு பெரும்பூதம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய தீப் பிழம்பாக மாறி பூமி உள்ளிட்ட பல கிரகங்களை விழுங்கிவிடும் என்றும் சமீபத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக பூமியில் மனித வாழ்க்கை சாத்தியமில்லாமல் போவதற்கு முன்னர் மனிதன் பூமி தவிர்த்த வேறு ஒரு புகலிடத்தை தேடிக் கண்டறிந்தாக வேண்டும். அத்தகைய தேடலில் நம் சூரிய மண்டலத்துக்கு மிக அருகாமையில் ஆல்பா சென்டோரி (Alpha Centauri) எனும் நட்சத்திர மண்டலம் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆல்பா சென்டோரியில் மனிதன் குடியேறி வாழ முடியுமா என்பதைக் கண்டறியும் பல ஆய்வு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய முயற்சிகளில், லேசர்கள் மூலம் உந்தித் தள்ளப்படக்கூடிய, ‘ஒரு தபால் தலை’ அளவுகொண்ட ‘நானோ விண்கலம்’ ஒன்றை நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான பகுதியை ஆய்வு செய்ய அனுப்பலாம் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்தது.

மிகச்சிறிய அந்த நட்சத்திர கப்பலானது ஒளியின் வேகத்தில் 2 சதவீத அளவு வேகத்துடன் பயணித்தால் சுமார் 20 வருடங்களில் ஆல்பா சென்டோரியைச் சென்றடையும் என்று கூறப்படுகிறது. ஆனால் மிகவும் பயங்கரமான தட்பவெப்ப மற்றும் பல்வேறு வகையான கதிரியக்கங்கள் கொண்ட சூழலை உடைய விண்வெளியில், அந்த மிகச்சிறிய நானோ விண்கலத்தில் உள்ள மின்னணு பாகங்கள் 20 வருடங்கள் வரை தாக்கு பிடிக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் உலக விண்வெளி ஆய்வாளர்கள்!

முக்கியமாக, ஹாக்கிங்கின் கனவுத் திட்டமான நானோ விண்கலத்துக்கு, விண் வெளியில் உள்ள கதிரியக்கம்தான் முதல் எதிரி என்கிறார்கள் நாசா மற்றும் கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அதாவது, நானோ விண்கலத்தில் உள்ள ‘கம்ப்யூட்டர் சிப்’பில் இருக்கும் சிலிக்கான் டை ஆக்சைடு பகுதியானது 20 வருட பயணம் முடிவதற்குள்ளாகவே முடிந்துவிடும் என்கிறார்கள்.

சரி, இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால், விண்வெளியில் அண்ட கதிரியக்கம் குறைவாக இருக்கக்கூடிய ஒரு பாதையைக் கண்டறிந்து அதில் நானோ கப்பலை செலுத்தலாம் என்கிறார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு. அதாவது, கதிரியக்கம் குறைவான ஒரு பாதையானது நானோ விண்கலத்தின் பயண காலத்தை மிகவும் அதிகமாக்கிவிடுமாம். சரி போகட்டும், நானோ விண்கலத்தின் மின்னணு பாகங்களை கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கும் ‘ஷீல்டிங்’ சேர்க்கலாம் என்றால் அதுவும் விண்கலத்தின் எடையைக் கூட்டி வேகத்தைக் குறைத்துவிடும்.

வேறு என்னதான் செய்வது என்று கேட்டால், மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது என்கிறார்கள்.

விண்வெளியின் கதிரியக்கத்தால் தனக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தானே சரிசெய்துகொள்ளும் ‘ஆன் சிப் ஹீலிங்’ எனும் வசதிகொண்ட ஒரு நானோ விண்கலத்தை தயார் செய்ய முடிந்தால் ஆல்பா சென்டோரிக்கு சேதாரம் எதுவுமில்லாமல் சென்றடையலாம் என்கிறார் நாசா விஞ்ஞானியான ஜின் வூ ஹான். சுருக்கமாகச் சொன்னால், 3 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நானோ கம்பியால் ஆன டிரான்சிஸ்டர் மூலமாக விண்கலத்தை வெப்பப்படுத்தி கதிரியக்கத்தால் ஏற்படும் சேதங்களை சரி செய்துகொள்ளலாம். அதன்பிறகு மீண்டும் 3 வருடங்களுக்கு பயணம். பிறகு சேதங்களை சரி செய்தல் என 20 வருட பயணம் வெற்றிகரமாக முடிந்து நானோ விண்கலமானது ஆல்பா சென்டோரியைச் சென்றடைந்துவிடும் என்கிறார் விஞ்ஞானி ஜின் வூ ஹான்.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
36
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2799 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4