தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர் + "||" + Kashmir landslide 16 people buried alive in the sand

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்

காஷ்மீரில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு 16 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மீண்டும் வெள்ளம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர்

ஸ்ரீநகர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் இருந்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

மீண்டும் வெள்ளம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.

இந்த வெள்ள சோகத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த நிலையில் காஷ்மீர் மீண்டும் கனமழையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அபாய அளவை கடந்து...

கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அனந்த் நாக் மாவட்டத்தில் சங்கம் என்னுமிடத்தில் வெள்ள அபாய அளவான 21 அடி உயரத்தை தாண்டி 22.35 அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதேபோல் ராம்முன்சி என்னுமிடத்தில் ஜீலம் நதியின் வெள்ள அபாய அளவு 18 அடி. ஆனால், அங்கு 19.40 அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக ஜீலம் நதிக் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

16 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்

இந்த நிலையில், பத்காம் மாவட்டத்தில் உள்ள லேடன் கிராமத்தில் மண் அரிப்பு காரணமாக பூமியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

இதில், அங்கிருந்த 2 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. அந்த வீடுகளில் வசித்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100 பேர் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பஞ்சாப்பின் பதிந்தா நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

300 பேர் மீட்பு

பூஞ்ம் மாவட்டத்தில் ஹர்ணி மற்றும் லோரன் ஆகிய இடங்களில் நிலச்சரிவால் வீடுகள் இடிந்து 10 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர், அவர்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர். ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷரா என்னுமிடத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வெள்ளம், மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 300 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர்.

நிவாரண முகாம்கள்

அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான மழை பெய்யலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருப்பதால், பத்காம், அனந்த் நாக் மாவட்டங்களின் பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 3–வது நாளாக மூடப்பட்டது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 7 மாவட்டங்களிலும் பனிப்பாறைச் சரிவு ஏற்படலாம் என்றும் எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் உறுதி

வெள்ளம் பாதித்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது.

மேலும், காஷ்மீரில் வெள்ள நிலைமையை நேரில் அறிவதற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியை உடனடியாக அனுப்பி வைத்தார்.

காஷ்மீர் புறப்படும் முன்பாக நக்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காஷ்மீர் வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் மிகுந்த கவலை கொண்டு உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்ய, தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்’’ என்று குறிப்பிட்டார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்–மந்திரி முப்தி முகமது சயீத் நேற்று காலை பார்வையிட்டார்.

ரூ.235 கோடி ஒதுக்கீடு

மேலும், காஷ்மீர் சட்டசபையில் நேற்று பேசிய முப்தி முகமது சயீத், மாநிலத்தின் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக ரூ.235 கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும் வகையில் மாநிலத்தில் உள்ள ராணுவத்தையும் காஷ்மீர் அரசு அழைத்துள்ளது.