முலாயம் சிங் - அகிலேஷ் பிளவு; சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் முடக்கம்? தேர்தல் ஆணையம் பதில்


முலாயம் சிங் - அகிலேஷ் பிளவு; சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் முடக்கம்? தேர்தல் ஆணையம் பதில்
x
தினத்தந்தி 4 Jan 2017 8:05 AM GMT (Updated: 4 Jan 2017 8:05 AM GMT)

சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் ‘சைக்கிள்’ யாருக்கு என்ற கேள்வியும், அங்கு அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக நிற்கிறது. சைக்கிளுக்கு இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர்.


புதுடெல்லி, 

சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கம் தொடர்பான கேள்விக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறிஉள்ளது.  

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் வெடித்துள்ள குடும்ப சண்டையில் நாளும் ஒரு நாடகம் அரங்கேறி வருகிறது. கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு, அவரது தம்பி சிவபால்சிங் வலது கரமாக இருக்கிறார். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கோ அவர் எதிரியாக இருக்கிறார். அகிலேஷ் யாதவுக்கும், சிவபால் சிங்குக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், இப்போது கட்சியையே பிளவுபடுத்தி விட்டது.

முலாயம் சிங் தரப்பு கட்சி உண்மையான கட்சியா, அகிலேஷ் யாதவ் தரப்பு கட்சி உண்மையான கட்சியா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் தேர்தல் சின்னம் ‘சைக்கிள்’ யாருக்கு என்ற கேள்வியும், அங்கு அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக நிற்கிறது. சைக்கிளுக்கு இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர். இருதரப்பும் சைக்கிள் சின்னம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது தேர்தல் ஆணையத்திடம். 

“நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாடி கட்சி. கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 80 முதல் 90 சதவீதம் வரையிலான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் எங்களை ஆதரிப்பதே இதற்கு சாட்சி. எனவே எங்களை உண்மையான சமாஜ்வாடி கட்சி என அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுள்ளோம்” என அகிலேஷ் தரப்பு கூறிஉள்ளது.

சின்னம் யாருக்கு?

இந்த பிரச்சினை குறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பொதுவாக ஒரு கட்சியில் இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டால் பெரும்பான்மை நிர்வாகிகள் உள்ள கட்சிக்கு அதன் சின்னமும், மற்றொரு தரப்பினருக்கு வேறொரு சின்னமும் ஒதுக்கலாம். அதே சமயம் இரு தரப்பினரும் சமபலத்துடன் இருந்தால் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இரு தரப்பினரும் வேறு கட்சி பெயரிலும், வெவ்வேறு சின்னத்திலும் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றார். உத்தரபிரதேசத்தில் எந்த நேரமும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலையில் அங்கு சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னத்தை முடக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் அகிலேஷ் யாதவிற்கு சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம்

இன்று 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியிடம் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் முடக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், இப்போதைக்கு சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் முடக்கம் என்ற எந்தஒரு கேள்வியும் அநுமானிக்கப்பட்டவையே. நாங்கள் ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டும், என்று கூறிஉள்ளார். தேர்தல் சின்னத்தை பயன்படுத்துவதில் சமாஜ்வாடி கட்சியின் வெவ்வேறு பிரிவுகளின் ஆவணங்களை ஆய்வு செய்வோம். இவ்விவகாரத்தை ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகள் மற்றும் அமைக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் முடிவுக்கு வருவோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story