ராகுல் காந்தி பகுதிநேர அரசியல்வாதி: பாரதீய ஜனதா குற்றச்சாட்டு


ராகுல் காந்தி பகுதிநேர அரசியல்வாதி:  பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jan 2017 12:41 PM GMT (Updated: 11 Jan 2017 12:41 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பகுதிநேர அரசியல்வாதி என பாரதீய ஜனதா கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

இது பற்றி பாரதீய ஜனதா தலைவர் சையது ஷாநவாஸ் உசைன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ராகுல் காந்தி ஒரு பகுதிநேர அரசியல்வாதி.  அவர் விடுமுறை கொண்டாட்டத்திற்கு பின் திரும்பி இருக்கிறார்.  அவர் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்றால், விடுமுறை கொண்டாட்டத்திற்காக சென்றிருக்க கூடாது என கூறியுள்ளார்.

நாட்டில் உயர் மதிப்புடைய பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ஜன் வேதனா சம்மேளன் என்ற பெயரில் கூட்டம் ஒன்றை இன்று நடத்தியது.

இந்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி ஆகியவற்றை தாக்கி பேசும் வகையில் இந்த கூட்டம் அமைந்திருந்தது.

அரசின் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு என்ற அறிவிப்பினால் நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு பெரிய அளவில் வலியை ஏற்படுத்தியுள்ளது.  அது நாட்டின் பொருளாதாரத்தினையும் பாதிக்கும் என இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், மிக மோசமுடைய நிலை வர உள்ளது என கூறினார்.  இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story