பண மதிப்பு நீக்கத்தால் இன்னும் மோசமான நிலைமை ஏற்படும் - மன்மோகன் சிங்


பண மதிப்பு நீக்கத்தால் இன்னும் மோசமான நிலைமை ஏற்படும் - மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 11 Jan 2017 3:28 PM GMT (Updated: 11 Jan 2017 3:28 PM GMT)

பண மதிப்பு நீக்கத்தால் இன்னும் மோசமான நிலைமை ஏற்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிஉள்ளார்.


புதுடெல்லி, 

உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் என மத்திய அரசு அறித்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மக்கள் வேதனை என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய மாநாடு டெல்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பண மதிப்பு நீக்கத்தால் இன்னும் மோசமான நிலைமை ஏற்படும். அப்போது இதற்கு எதிராக குரலை உயர்த்தவேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கடமை. 

கடந்த 2 மாதங்களில் மோசமாக இருந்த நாட்டின் நிலைமை இன்னும் மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. 

வேளாண், தொழில், சேவை துறைகளில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பாக முறைசார துறைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அது தேசிய வருமானத்தில் 45 சதவீத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையினால் நாட்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றார். 

பண மதிப்பை நீக்கிய நடவடிக்கை ஒரு தனி மனிதரால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. 

இதனால் நாட்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். நாட்டின் வளர்ச்சியும் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் குறையும். ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கும் என்கிற நிலைமாறி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுரை கூறி உள்ளது. தனது முடிவுகளையே ரிசர்வ் வங்கியிடம் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பது மோசமானது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகள், தினக் கூலிகளுக்கு மத்திய அரசு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார். 

மாநாட்டில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்தபோது உயிர் இழந்தவர்களுக்காக இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Next Story