மகாத்மா காந்தி புகைப்படம் புறக்கணிப்பு கதர் வாரிய டைரி, காலண்டரில் மோடி படம் காங்கிரஸ் எதிர்ப்பு


மகாத்மா காந்தி புகைப்படம் புறக்கணிப்பு கதர் வாரிய டைரி, காலண்டரில் மோடி படம்  காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Jan 2017 10:00 PM GMT (Updated: 13 Jan 2017 8:12 PM GMT)

கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் வெளியிட்டுள்ள டைரி, காலண்டரில் காந்தி புகைப்படத்துக்கு பதிலாக பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி

கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் டைரி மற்றும் காலண்டரில், மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கதர் கிராம தொழில் வாரியத்தில் ஒரு பிரிவினரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை தேவையற்றது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ‘‘கதர் வாரியம் வெளியிடும் டைரி, காலண்டரில் காந்தி படம் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று அந்த வாரியத்தில் விதிமுறை ஏதும் இல்லை. காந்தி படம் இல்லாமல், இதற்கு முன்பும் பலதடவை டைரி வெளிவந்துள்ளது. எனவே, காந்தி படத்துக்கு பதிலாகத்தான் மோடி படம் இடம்பெற்றுள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும், காங்கிரசின் 50 ஆண்டு கால ஆட்சியின்போது, கதர் விற்பனை 2 சதவீதம் முதல் 7 சதவீதம்வரைதான் இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், கதர் விற்பனை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகளே காரணம். சர்ச்சை ஏற்படுத்துவோர், இதை உணர வேண்டும்’’ என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story