தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 13 Jan 2017 11:30 PM GMT (Updated: 13 Jan 2017 8:30 PM GMT)

மாஞ்சா நூலுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

புதுடெல்லி

‘பீட்டா’ அமைப்பு புகார்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு பொடி கொண்ட கலவையை பூசி தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா நூல் அவ்வப்போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரை பறித்து விடுகிறது.

எனவே இந்த மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியம் (பீட்டா) சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மாஞ்சா நூலால் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக, தங்கள் புகாரில் பீட்டா அமைப்பு கூறியிருந்தது.

குஜராத் வியாபாரிகள் முறையீடு

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மாஞ்சா நூலுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் 14–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நூலால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாக கூறியிருந்த தீர்ப்பாயம், இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் ஏராளமான மாஞ்சா நூல் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக அடிக்கடி பட்டம் விடும் திருவிழா நடத்தப்படும் குஜராத்தில், மாஞ்சா வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த தடையை நீக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மாஞ்சா நூலால் ஆபத்து

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.பி.லோகுர், பி.சி.பந்த் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் தேடலாம் என்று தெரிவித்தனர்.

இதைப்போல சீன மாஞ்சா நூலுக்கான தடையையும் நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கண்ணாடி துண்டுகள் கொண்ட கலவை பூசப்பட்ட நூலால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


Next Story