தேர்தலுக்கு முன்பே மத்திய பட்ஜெட் தாக்கல்: சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளதா? என்பதற்கு ஆதாரம் தாக்கல் செய்யுங்கள்


தேர்தலுக்கு முன்பே மத்திய பட்ஜெட் தாக்கல்: சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளதா? என்பதற்கு ஆதாரம் தாக்கல் செய்யுங்கள்
x
தினத்தந்தி 14 Jan 2017 12:00 AM GMT (Updated: 13 Jan 2017 8:30 PM GMT)

தேர்தலுக்கு முன்பே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் சட்டவிதிகள் மீறப்பட்டு உள்ளதா? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

புதுடெல்லி

தேர்தலுக்கு முன்பே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் சட்டவிதிகள் மீறப்பட்டு உள்ளதா? என்பதற்கு தகுந்த ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பட்ஜெட்டும், தேர்தலும்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 4–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதி வரை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 4–ந் தேதி தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே, பிப்ரவரி மாதம் 1–ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே பட்ஜெட் வெளியாவதால் மத்திய அரசு பல சலுகைகளை அறிவிக்கும். இது சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தேர்தல் முடிந்தபிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பா.ஜனதாவின் தேர்தல் சின்னமான தாமரையை முடக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

சட்ட அம்சங்கள் இல்லை

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.எல்.சர்மாவிடம், ‘‘தேர்தலுக்கு முன்பே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் எந்த வகையில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள்(வக்கீல்) தெரிவிக்க வேண்டும். இந்த மனுவில் உங்களது கோரிக்கைக்கு ஆதரவான எந்த சட்ட அம்சங்களும் சுட்டிக்காட்டப்படவில்லை’’ என்றனர்.

ஒத்திவைப்பு

தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறும்போது, ‘‘உங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவாக எத்தகைய வலுவான சட்ட விதிகள் உள்ளன என்பதை விளக்கமாக தெரிவிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு அதை தாக்கல் செய்யுங்கள். அதன்பிறகு, இந்த மனு மீது விசாரணை நடத்தலாம்’’ என்று கூறி விசாரணையை வருகிற 20–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story