ஜல்லிக்கட்டு தடை நீக்க அவசர சட்டம் கொண்டுவரக் கூடாது பீட்டா ஜனாதிபதிக்கு கடிதம்


ஜல்லிக்கட்டு தடை நீக்க அவசர சட்டம் கொண்டுவரக் கூடாது பீட்டா ஜனாதிபதிக்கு கடிதம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:54 AM GMT (Updated: 14 Jan 2017 4:54 AM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி

இது தொடர்பாக, பீட்டாவின் இந்தியக் கிளையின் தலைமை செயல் அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் மோதி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவேக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஜல்லிக்கட்டிற்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது என்றும், இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் கொடூரமான நிகழ்வுகளில் காளைகள் பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

காளைகளின் இயற்கையான மிரளும் தன்மையை ஜல்லிக்கட்டுக்காக பயன்படுத்துவதாகவும், 2012 லிருந்து 2014 வரை அரசு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் அதில் பயன்படுத்தப்படும் காளைகள் படும் தேவையில்லாத துன்பங்கள் எவ்விதமான கட்டுப்பாடுகளாலும் தடுக்க முடியாது என்றும் ஜோஷிபுரா கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் வழங்கப்பட்டதை அப்போது பதிவு செய்த விலங்குகள் நலவாரியத்தின் அதிகாரிகள், காளையின் வால் முறுக்கப்பட்டு கடிக்கப்பட்டதையும், கத்தி, கம்பு, ஈட்டி மற்றும் அரிவாள் கொண்டு காளைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும் கண்டதாக அவர் கூறியுள்ளார்.

2010 முதல் 2014 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் 17 பேர் பலியாகி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருப்பதாகவும், 1,100 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிய அவர், இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதிகாரத்தை பொருத்தமற்ற வகையில் பயன்படுத்துவதற்கு ஒப்பானதாக கருதப்படும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவில் பீட்டாவின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

இந்திய கலாசாரத்தில் மாட்டினங்கள் வணங்கப்படுபவை என்றும், சிவன் கோயிலில் நுழைந்து நந்தி சிலையை அவமதித்தால் மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் அப்படியிருக்க உண்மையில் உயிர்வாழும் எருதுகளை துஷ்பிரயோகம் செய்வதை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும் என்று அவர் கேட்டார்.

தமிழகத்தின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக காவல்துறையின் தலைவர் ஆகியோருக்கும் பீட்டா இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் எந்த விதமான ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்றும், இந்த உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆணையை மீறி செயல்படுவது என்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதாக கருதப்படும் என்று அதில் கூறியுள்ள அவர், ஜல்லிக்கட்டு போட்டிகளை உடனடியாக தடுத்து நிறுத்த தவறுவது சட்டத்தின் ஆட்சியை நிலைகுலைக்க வைக்கும் செயல் என்றும், நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story