திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளைஞர்கள்


திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 15 Jan 2017 5:07 AM GMT (Updated: 15 Jan 2017 5:06 AM GMT)

திண்டுக்கல்லில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை இஞைர்கள் அடக்கினார்கள்.



திண்டுக்கல், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என மாடுபிடி ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. 

இதனை காண்பதற்கும், காளைகளை அடக்குவதற்கும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவனியாபுரம், பாலமேடு, மேலூர், சிவகங்கை ஆகியபகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. தகவல் அறிந்த ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். 
ஆனால் தடையை மீறி இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு குக்கர், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள் வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என போலீசார் தடுத்தாலும் அங்குள்ள இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்த ஜல்லிக்கட்டு நாம்தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். 

பழனி அருகே ஆண்டிப்பட்டியில் கொங்குஇளைஞர் பேரவை சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் 50 - க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  தேனி மாவட்டம் கூடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சங்க மாநிலதுணைத்தலைவர் செங்குட்டுவன் தலைமையில் காளைகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின்னர் 2-வது வார்டு ஜல்லிக்கட்டு தெருவில் திடீரென காளைகளை அவிழ்த்துவிட்டு ஓடவிட்டனர். இளைஞர்கள் விரட்டிசென்று காளைகளை அடக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடுவதை தடுத்தனர். 

Next Story