சமூக வலைதளங்களை புகார் தெரிவிக்க பயன்படுத்தினால் நடவடிக்கை ராணுவ தளபதி எச்சரிக்கை


சமூக வலைதளங்களை புகார் தெரிவிக்க பயன்படுத்தினால் நடவடிக்கை ராணுவ தளபதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2017 11:06 AM GMT (Updated: 15 Jan 2017 11:06 AM GMT)

ராணுவ வீரர்கள் புகார்கள் தெரிவிக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

இந்திய ராணுவத்திற்குள் உள்ள பிரச்சனைகள் குறித்து வீரர்கள் சமூக வலைதளங்களில் புகார்கள் தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்களுக்கு போதிய மற்றும் தரமான உணவு வழங்கப்படுவது கிடையாது, எல்லையில் 13 மணி நேரம் நிற்கும் நாங்கள் பட்டினியாக தூங்க செல்ல வேண்டியது உள்ளது என்று பகதூர் யாதவ் என்ற ராணுவ வீரர் புகார் தெரிவித்தார். இதனையடுத்து ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே பேதம் காட்டப்படுவதாகவும், உயர் அதிகாரிகள் அநாகரிகமாக நடத்துவதாகவும்  மற்ற இரு வீரர்கள் புகார்களை தெரிவித்தனர். இவையனைத்தும் வீரர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டவை. 

கடந்த 13-ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய ராணுவ தளபதி பிபின் ராவத்; வீரர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சமூக வலைத்தளங்கள் இரு பக்கமும் கூர்மையான ஆயுதங்களை போன்றது. ஒரு புறம் நமக்கு சாதகமாக இருந்தாலும், மற்றொரு புறம் நமக்கே எதிராகவும் அமைந்து விடும். உணவு, பதவி உயர்வு உள்ளிட்ட எந்த குறைகளாக இருந்தாலும் வீரர்கள் அதை தெரிவிக்க ராணுவ தலைமை அலுவலகங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்படும். 

தங்கள் குறைகளை வீரர்கள் அதில் தயக்கம் இல்லாமல் தெரிவிக்கலாம். அது தொடர்பாக உயர் அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். அதில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் என்னிடம் புகார்களை தெரிவிக்கலாம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் ஏற்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் பெயர்கள் கண்டிப்பாக வெளியிடப்படமாட்டாது என்று கூறினார். 

நடவடிக்கை

இந்திய ராணுவ தினமான இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், “சில வீரர்கள் அவர்களுடைய பிரச்சனையின் மீது மீடியாக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று நினைத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இது ராணுவ வீரர்களின் மன உறுதியை பாதிக்கிறது, அதனால் ராணுவமும். உங்களால் குற்றம் நேரிட முடியும்... தண்டனை பெறச்செய்யும்,” என்று கூறிஉள்ளார். பிரச்சனையை முறைப்படி ராணுவத்திடம் கொண்டு வராமல் சமூக வலைதளங்கள் மூலம் வெளியே விடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிபின் ராவத் எச்சரித்து உள்ளார். 


Next Story