ராகுல் காந்தியுடன் சந்திப்பு: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரசில் இணைந்தார்


ராகுல் காந்தியுடன் சந்திப்பு: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 15 Jan 2017 10:15 PM GMT (Updated: 15 Jan 2017 9:39 PM GMT)

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி

முன்னாள் பா.ஜனதா எம்.பி.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பா.ஜனதா கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜனதா சார்பில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜனதா கட்சியின் முன்னணி தலைவராக விளங்கி வந்த சித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி மேல்–சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் பா.ஜனதா சார்பில் மாநில சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார்.

‘அவாஸ்–இ பஞ்சாப்’ அமைப்பு

பா.ஜனதா தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் சித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது மனைவி கவுரும் தனது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் ஆம் ஆத்மியில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், சித்துவும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இது தோல்வியில் முடிந்ததால் முன்னாள் அகாலிதள எம்.எல்.ஏ. பர்கத் சிங் உள்ளிட்ட சிலருடன் இணைந்து ‘அவாஸ்–இ பஞ்சாப்’ என்ற அமைப்பை சித்து தொடங்கினார்.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு

இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும், அவாஸ்–இ பஞ்சாப் அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவருமான பர்கத் சிங்கும் கடந்த நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக சித்துவும், தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசி வந்தார்.

இந்த நடவடிக்கையின் இறுதியாக நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து சித்துவும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கட்சியை வலுப்படுத்தும்

சித்துவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ‘நேரான அணுகுமுறை, தேசியவாத நடவடிக்கையில் கருத்தியல் சார்ந்த கடப்பாடு மற்றும் நகைச்சுவை திறன் கொண்ட சித்துவின் வருகை பஞ்சாப் மற்றும் பிற இடங்களில் கட்சியை வலுப்படுத்தும்’ என்று கூறியுள்ளது.

மேலும் ஒரே எண்ணம் கொண்டவர்களை காங்கிரஸ் குடையின் கீழ் இணைக்கும் ராகுல் காந்தியின் தொலைநோக்கு பார்வையையும் பாராட்டுவதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story