‘காந்தியை விட மோடியே சிறந்த வியாபார அடையாள சின்னம்’ அரியானா மந்திரியின் பேச்சால் புதிய சர்ச்சை


‘காந்தியை விட மோடியே சிறந்த வியாபார அடையாள சின்னம்’ அரியானா மந்திரியின் பேச்சால் புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 15 Jan 2017 11:00 PM GMT (Updated: 15 Jan 2017 9:54 PM GMT)

காந்தியை விட மோடியே சிறந்த வியாபார அடையாள சின்னம் என அரியானா மந்திரி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அம்பாலா,

காந்தியை விட மோடியே சிறந்த வியாபார அடையாள சின்னம் என அரியானா மந்திரி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

காலண்டர் சர்ச்சை

தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.) வெளியிடுகிற காலண்டர், டைரியில் வழக்கமாக தேசத்தந்தை மகாத்மா காந்தி படம் இடம்பெற்றிருக்கும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக காந்திக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அரியானா மாநிலம், அம்பாலா நகரில் மாநில சுகாதார சேவைகள், தேர்தல்கள் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனில் விஜ் (பாரதீய ஜனதா) நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், காதி காலண்டரில் மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக மோடியின் படத்தை அச்சிட்டு வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

மோடியே சிறந்த அடையாளம்

அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:–

காந்தி படத்துக்கு பதிலாக மோடியின் படத்தை இடம் பெறச்செய்திருப்பது நல்ல நடவடிக்கை. காந்தியை விட மோடி நல்லதொரு வியாபார அடையாள சின்னம். மோடி என்ற வர்த்தக அடையாளத்தால், காதி விற்பனை பெருகி இருக்கிறது.

காதி என்றாலே காந்தி என்று எந்தவொரு காப்புரிமையும் கிடையாது. காந்தியின் பெயரை காதியுடன் இணைத்ததில் இருந்து, அது வீழ்ச்சியைத்தான் சந்தித்திருக்கிறது. காந்தியின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் போட்டதால், அதன் மதிப்பும் குறைந்துதான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் சாடல்

மந்திரி அனில் விஜ்ஜின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இதை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், ‘‘சர்வாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியும் கூட வலிமையான வியாபார அடையாள சின்னங்கள்தான்’’ என குறிப்பிட்டுள்ளார்.

‘மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’

காங்கிரஸ் ஊடகப்பிரிவின் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘காந்தியை கொன்று விட முடியும். அவரது படங்களை அகற்றிவிட முடியும். ஆனால் இந்தியாவின் ஆன்மாவில் அவர் நிரந்தரமாக உள்ளார்’’ என குறிப்பிட்டார்.

அத்துடன், ‘‘மந்திரி அனில் விஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தி உள்ளார்.

காந்தி கொள்ளுப்பேரன்

காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, ‘‘இது மேல்மட்டத்தில் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற பிரசாரம். மந்திரி அனில் விஜ், ஆர்.எஸ்.எஸ். குரலில் பேசி இருக்கிறார்’’ என்று கூறினார்.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கருத்து தெரிவிக்கையில், ‘‘மகாத்மா காந்தியை அவமதிப்பது என்பது நாட்டுக்கு துரதிர்ஷ்டவசமானது. காந்திஜி, நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார். காந்தியை பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறுவதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா?’’ என சாடினார்.

பாரதீய ஜனதா பதில்

அதே நேரத்தில் மந்திரி அனில் விஜ்ஜின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாரதீய ஜனதா இந்த விவகாரத்தில், அவரை அன்னியப்படுத்தி உள்ளது. அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘‘அனில் விஜ்ஜின் கருத்துகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இவை, அவரது தனிப்பட்ட கருத்துகள்’’ என கூறினார்.

அரியானா மாநில முதல்–மந்திரி மனோகர்லால் கட்டார், ‘‘மந்திரியின் கருத்துகள், அவரது தனிப்பட்ட கருத்துகள். அதை கட்சி ஆதரிக்கவில்லை’’ என குறிப்பிட்டார்.

வாபஸ்

சர்ச்சையை அடுத்து மந்திரி அனில் விஜ், காந்திஜியை பற்றிய தனது கருத்துகளை வாபஸ் பெற்றார். இதுபற்றி அவர் டுவிட்டரில் ‘‘மகாத்மா காந்தி பற்றி தெரிவித்த கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள். யாருடைய மனதையும் அது புண்படுத்துவதைத் தடுக்கும் விதத்தில் நான் அவற்றை திரும்பப் பெறுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.


Next Story