சமூக ஊடகங்களில் குறைகளை தெரிவிக்கும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேச்சு


சமூக ஊடகங்களில் குறைகளை தெரிவிக்கும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேச்சு
x
தினத்தந்தி 15 Jan 2017 11:30 PM GMT (Updated: 15 Jan 2017 10:10 PM GMT)

சமூக ஊடகங்களில் குறைகளை தெரிவிக்கும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

புதுடெல்லி

வீரர்கள் புகார்

எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அரியானாவை சேர்ந்த வீரர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் புகார் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதைப்போல ஓய்வூதியம் மற்றும் விடுமுறை அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரும் புகார் கூறினார்.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை பிரதமர் அலுவலகமும் கேட்டுக்கொண்டு உள்ளது.

ராணுவ தினம்

இந்த நிலையில் 69–வது ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், சமூக வலைத்தளங்களில் குறைகளை தெரிவிக்கும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

என்னை தொடர்பு கொள்ளலாம்

ராணுவத்தில் எந்த ஒரு வீரருக்கும் ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய சரியான மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றின் மூலம் வீரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன், சமநிலையும் பேணப்படும். இந்த நடவடிக்கையில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் என்னை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

அதை விட்டுவிட்டு வீரர்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாக குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது, மற்றவர்களிடம் குறிப்பாக எல்லையில் நாட்டுக்காக பணியாற்றும் துணிச்சல் மிக்க வீரர்களிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் செயல் மூலம் நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள். இதற்காக உங்களை தண்டிக்க முடியும்.

தகுந்த பதிலடி

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வந்தாலும், எல்லையில் அமைதி நிலவவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அந்த நாடு தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

பயங்கரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு நிலைமை மிகவும் கொந்தளிப்பாக மாறியது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு, உண்மையான கட்டுப்பாட்டு கோடு போன்ற பகுதிகளில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். மேலும் அனைத்து நிலையிலும் நமது வீரர்கள் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

வீரதீர விருதுகள்

ராணுவத்தின் முதல் தளபதியாக பீல்டு மார்‌ஷல் கே.எம்.கரியப்பா கடந்த 1949–ம் ஆண்டு ஜனவரி 15–ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் தேசப்பாதுகாப்பில் மிகச்சிறந்த துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகளை வழங்கி ராணுவ தளபதி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story