பயங்கரவாதி மசூர் ஆசாத் விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம்: பிரான்சு உறுதி


பயங்கரவாதி மசூர் ஆசாத் விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம்: பிரான்சு உறுதி
x
தினத்தந்தி 16 Jan 2017 5:45 AM GMT (Updated: 16 Jan 2017 5:45 AM GMT)

பயங்கரவாதி மசூர் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிக்க முழு ஆதரவை பிரான்சு அளிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.


புதுடெல்லி,

பதன்கோட் விமான படை தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி மசூர் ஆசாத்துக்கு எதிரான ஐநா நடவடிக்கைக்கு தனது வீட்டோ அதிகாரம் மூலம் சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்தியாவிற்கு கடும் அதிருப்தியை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த நிலையில், மசூர் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிக்க இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முழு ஆதரவு அளிப்போம் என்று பிரான்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரான்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் மார்க் அய்ராவுல்ட் இது பற்றி கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை பிரான்சு வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்சு உறுதுணையாக இருக்கும்.

எங்களுடைய கூட்டு முயற்சி இருந்த போதிலும், மசூர் ஆசாத்துக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஒருமனதாக முடிவு எட்ட முடியவில்லை. மசூர் ஆசாத்தின் பயங்கரவாத இயக்கம் ஐநாவால் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் உள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகீதின் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story