கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறை; பாரதீய ஜனதா தலைவர்களுக்கு விஐபி பாதுகாப்பு


கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறை; பாரதீய ஜனதா தலைவர்களுக்கு விஐபி பாதுகாப்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 9:43 AM GMT (Updated: 16 Jan 2017 9:43 AM GMT)

கேரளாவில் பா.ஜனதாவினர் மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து அவர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


திருவனந்தபுரம், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மாநில அரசு இதனை கண்டுக்கொள்வது கிடையாது என்று குற்றம் சாட்டப்படுகிறது. 

கேரள பா.ஜனதாவின் கோரிக்கையை அடுத்து மத்திய அரசு சிஆர்பிஎப் படை வீரர்கள் அடங்கிய பாதுகாப்பை அக்கட்சியின் தலைவர்களுக்கு  வழங்க முடிவுசெய்து உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பொறுப்பிற்கு வந்தபின்னர் பாரதீய ஜனதாவினர் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளது என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டாகும். கேரள பா.ஜனதா தலைவர் ராஜசேகர், முன்னாள் தலைவர் பிகே கிருஷ்ணதாஸ், பொதுச் செயலாளர் எம்.டி. ரமேஷ் மற்றும் கே. சுரேந்திரன் ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.

12 வீரர்கள் அடங்கிய குழுவானது பா.ஜனதா தலைவர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறிஉள்ளார். 

கடந்த வருடம் மட்டுமே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது 400-க்கும் மேற்பட்ட தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டிஉள்ளது. 

பாதுகாப்பு விபரங்களை எடுத்துக் கொள்ள சிஆர்பிஎப்பிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் கேரள மாநிலம் கோழிக்கோடுவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை எழுப்பி இருந்தார். 

“பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறையின் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நாங்கள் பாதுகாப்பை வழங்கிஉள்ளோம். விசாரணை அறிக்கையானது பா.ஜனதாவின் 4 தலைவர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்பதை காட்டியது,” என்று உள்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் கடந்த டிசம்பர் மாதம் 4 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மத்திய பாதுகாப்பு முகமையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா தலைவர் மனைவியும் உயிரிழப்பு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் கண்ணன் வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது கடந்த 28-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீ வைத்துவிட்டனர். தீ சமையல் அறை வரையில் சென்று எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீடு எரிந்தது. கண்ணன் மற்றும் அவருடைய மனைவி விமலா மற்றும் அவருடைய சகோதரர் ராதா கிருஷ்ணன் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 



கடந்த மூன்றாம் தேதியே ராதா கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே தீ வைப்பு சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூவரை போலீஸ் கைது செய்தது. இன்னும் சிலருக்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விமலா உயிரிழந்தார். போலீஸ் விசாரித்து வருகிறது.

Next Story