சமாஜ்வாடி மோதல்; அகிலேஷ் யாதவிற்கு எதிராக களமிறங்குகிறார் முலாயம் சிங்!


சமாஜ்வாடி மோதல்; அகிலேஷ் யாதவிற்கு எதிராக களமிறங்குகிறார் முலாயம் சிங்!
x
தினத்தந்தி 16 Jan 2017 11:27 AM GMT (Updated: 16 Jan 2017 11:27 AM GMT)

சமாஜ்வாடி கட்சி மோதலில் அகிலேஷ் யாதவிற்கு எதிராக முலாயம் சிங் யாதவ் களமிறங்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது.


லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகனும், முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இறுதியாக மோதலானது சைக்கிள் சின்னத்தில் நீடிக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்–அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது பற்றி தேர்தல் கமி‌ஷன் விரைவில் தனது முடிவை அறிவிக்கிறது.

இப்பிரச்சனையில் அகிலேஷ் யாதவை சமாதானம் செய்யும் முலாயம் சிங் யாதவின் போராட்டமானது முடிவுக்குவந்தது என்றே தெரிகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் முலாயம் சிங்கே அகிலேஷ் யாதவிற்கு எதிராக களமிறங்க முடிவுசெய்து விட்டார் என பார்க்கப்படுகிறது. 

பிளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கான போராட்டம் கோர்ட்டு வரையில் செல்லும் என்பதை இன்று முலாயம் சிங் யாதவ் உறுதிப்பட தெரிவித்துவிட்டார். 

லக்னோவில் சமாஜ்வாடி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய முலாயம் சிங் யாதவ் மாநிலத்தில் வெற்றியை தீர்மானம் செய்யும் வாங்கு வங்கிகளை தன்பக்கம் திருப்பும் முயற்சியை தொடங்கிவிட்டார். அவர் பேசுகையில்,  “நான் இஸ்லாமியர்களின் நலனுக்காக பணியாற்றுபவன். மாநிலத்தின் டிஜிபியாக இஸ்லாமியரை நியமனம் செய்தபோது அகிலேஷ் யாதவ் என்னிடம் 15 நாட்கள் பேசவில்லை. இஸ்லாமியர் அவ்விடத்திற்கு வருவதை அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை. இது ஒரு இஸ்லாமியர்களுக்கு எதிரான செய்தியை கொடுத்தது,” என்று குற்றம் சாட்டினார். 

இஸ்லாமியர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களையே அகிலேஷ் யாதவ் கொண்டு இருந்தார் என்றும் முலாயம் சிங் யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டிஉள்ளார். கட்சி உடைவதற்கு மூல காரணம் என குற்றம் சாட்டப்படும் ராம் கோபால் யாதவிற்கு எதிரான தாக்குதலையும் தொடங்கிய முலாயம் சிங் யாதவ், ராம் கோபால் யாதவ் பா.ஜனதாவின் உத்தரவின் பெயரில் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிஉள்ளார். 

“ராம்கோபால் யாதவ் உத்தரவின் பெயரிலேயே அகிலேஷ் செயல்படுகிறார். என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றால், நான் அகிலேஷ் யாதவிற்கு எதிராக போட்டியிடுவேன்,” என்று கூறிஉள்ளார் முலாயம் சிங் யாதவ். இஸ்லாமியர்களுக்காக உயிர் வாழ்வேன், அவர்களுக்காகவே உயிரிழப்பேன். இஸ்லாமியர்களின் நலன் என்று வந்தால் அகிலேஷ் யாதவிற்கு எதிராகவும் போட்டியிடுவேன். கட்சியை உருவாக்க நான் பல்வேறு தியாகங்களை செய்தேன். அகிலேஷ் என்னுடைய பேச்சை கேட்கவே இல்லை, அகிலேஷ் பெண் உள்பட அதிகமான மந்திரிகளை நீக்கினார். எந்தஒரு காரணமும் இன்றி மூத்த மந்திரிகளும் நீக்கப்பட்டனர் என்று முலாயம் சிங் யாதவ் பேசினார். 

கட்சி தொண்டர்கள் முன்பு பேசுவதற்கு முன்னதாக ஷிவ்பால் யாதவ் வீட்டிற்கு சென்று முலாயம் சிங் யாதவ் ஆலோசனை நடத்தினார். 


Next Story