முலாயம் சிங்கிற்கு ஏமாற்றம்; அகிலேசுக்கு சைக்கிள் சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம்


முலாயம் சிங்கிற்கு ஏமாற்றம்; அகிலேசுக்கு சைக்கிள் சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 16 Jan 2017 1:30 PM GMT (Updated: 16 Jan 2017 1:30 PM GMT)

சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவிற்கு வழங்கியது.


புதுடெல்லி, 

 உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகனும், முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

 வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவின் விருப்பம் நிறைவேற்றப்படாததால், அவர் கடந்த 1–ந் தேதி, கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி, தன்னை கட்சியின் தேசிய தலைவராக அறிவித்துக்கொண்டார். ஆனால், அந்த கூட்டம் செல்லாது என்று முலாயம்சிங் கூறினார்.
இருதரப்பினரும், கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷனை அணுகி முறையிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த ஆதாரங்களை பரிசீலித்த தேர்தல் கமி‌ஷன், இருதரப்பினரிடம் நேற்று முன்தினம் தனது விசாரணையை முடித்தது. தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், தேர்தல் கமி‌ஷன் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அப்போது முலாயம் சிங்கிற்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் என்பதை அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையம் அவருக்கே சைக்கிள் சின்னத்தை வழங்கியது. சைக்கிள் சின்னத்தை கோரிய முலாயம் சிங்கின் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது. சின்னத்துடன் சமாஜ்வாடி கட்சியும் அகிலேஷ் யாதவிற்கே சொந்தமானது. 

7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அகிலேஷ் யாதவிற்கு சவால் விடுக்கும் அறிவிப்பை இன்று முலாயம் சிங் யாதவ் விடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவையே எதிர்த்து போட்டியிடுவேன் என முலாயம் சிங் எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story