இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 16 Jan 2017 3:34 PM GMT (Updated: 16 Jan 2017 3:34 PM GMT)

மும்பை இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

புதுடெல்லி,  


மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரின், 24 வாரகால கரு போதிய வளர்ச்சியற்ற நிலையில் காணப்பட்டது. குறிப்பாக குழந்தையின் மண்டை ஓடு இல்லாததால் அது பிறக்கும் போது தாய் மற்றும் சேயின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறினர். இதனால் இந்த கருவை கலைக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். எனவே அந்த கருவை கலைக்க அனுமதிக்குமாறு இளம்பெண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் 7 உறுப்பினர்களை கொண்ட டாக்டர் குழுவினர் இளம்பெண்ணை பரிசோதித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த மனு மற்றும் டாக்டர்களின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட அமர்வு, இளம்பெண்ணின் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர். 

கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சியின்மை அல்லது கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற சூழல்கள் இருந்தால் மட்டுமே அந்த கருவை கலைக்க இந்திய அரசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது. கருகலைப்பு சட்டம் 1971-ன் படி, வயிற்றில் 20 வாரங்களுக்கு மேல் கரு வளர்ந்த பின்னர் அதனை கலைக்க முடியாது. 12 முதல் 20 வாரங்களில் கருவை கலைக்க சட்டம் அனுமதி வழங்கி உள்ளது, கர்ப்பம் காரணமாக தாயின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ அல்லது பிறக்கும் குழந்தைக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் காரணத்திலே இதுவும் அனுமதிக்கப்படுகிறது. 

 கருதரித்து 20 வாரங்களுக்குள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று கருவை கலைக்கலாம் என்று 1971ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் சரியயன்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ கருச்சிதைவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிரா பகுதியில் இருந்து இதேபோன்று 4 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Next Story